தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசின் உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடத்தார். ஆளுநர் ஆர்.என்.ரவி அவையில் இருந்து வெளியேறிய நிலையில், சபாநாயர் அப்பாவு ஆளுநர் உரையை வாசித்தார்.
இதை தொடர்ந்து, சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடியதற்கும், தேசிய கீதமும் பாடப்பட வேண்டும் என்ற தன்னுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் உரையை படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியதாக ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.
இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் துறைமுருகன்,
அரசியல் சாசனத்திற்கு விரோதமாக ஆளுநர் ரவி செயல்படுகிறார். முந்தைய ஆண்டுகளைப் போல இம்முறையும் உரையை முழுமையாக படிக்காமல் ஆளுநர் சென்றுள்ளார்.
அவையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, உரையின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு, கடந்த ஆண்டே ஆளுநருக்கு கடிதத்தில் தெளிவுபடுத்தியிருந்தார். நாட்டின் மீதும் தேசிய கீதத்தின் மீதும், தமிழ்நாடு மக்களும், இந்த அவையும் பெரும் மதிப்பை கொண்டுள்ளது.
இந்த அரசு தேசிய ஒருமைப்பாட்டிலும், நாட்டுப் பற்றிலும், தேசத் தலைவர்கள் மீதும் என்றும் மாறாத நன்மதிப்பைக் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “அரசின் உரையை வாசிக்க விருப்பம் இல்லாத காரணத்தால் ஆளுநர் இவ்வாறு சாக்கு போக்கு சொல்கிறார். தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, இறுதியில் தேசிய கீதம் பாடுவடுதான் மரபு. "நான் சொல்கிறேன் மாற்று” எனச் சொன்னால் அப்படி மரபுகளை எல்லாம் மாற்ற முடியாது" என்று தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"அரசியல் சட்டப்படி, ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபு! அதை மீறுவதையே தனது வழக்கமாக வைத்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
கடந்த ஆண்டுகளில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர் இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது.
தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.
"தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?" என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா! என்று அவர் தெரிவித்துள்ளார்.
சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் கண்டனம்!
தமிழ்நாடு அரசின் பொது நிகழ்வுகளின் ஆரம்பத்தில் தமிழ் தாய் வாழ்த்தும், நிகழ்வின் நிறைவில் தேசிய கீதம் பாடுவது பல பத்தாண்டுகளாக மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை நன்கறிந்த ஆளுநர், தமிழ்நாடு அரசு தேசிய கீதத்தையும், அரசியலமைப்பு சட்டத்தையும் அவமதித்து வருவதாக ஆளுநர் கூறுவது அப்பட்டமான அவதூறு பரப்பும் நோக்கம் கொண்டதாகும்.
நாட்டின் உச்ச நீதிமன்றம் ஆளுநரின் கடமைப் பொறுப்புகளை சுட்டிக்காட்டி, அறிவுறுத்திய உத்தரவுகளையும் அலட்சியப்படுத்தி வருகிறார். சட்டப் பேரவையில் ஆளுநர் உரை நிகழ்வுகள் முடிவடையும் வரை இருந்து, தேசிய கீதத்தை மதிக்க தவறிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் மரபுகளையும், அமைதி நிலையினையும் சீர்குலைக்கும் தீய உள்ள நோக்கம் கொண்ட தொடர் நடவடிக்கைகளை வன்மையான கண்டனம் என்று தெரிவித்துள்ளார்.
விசிக தலைவர் தொல் திருமாவளவன் கண்டனம்!
"தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரையாற்றாமல் புறக்கணிப்பு!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இறுதியாக தேசிய கீதம் இசைக்கப்படுவது மரபு!
ஆளுநர் தமிழ்நாடு சட்டமன்ற மரபை அவமதித்திருப்பது கண்டனத்துக்குரியது!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்!" என்று தெரிவித்துள்ளார்.