நாகர்கோவில். ஜன. 7- கடல் போல் காணப்பட்ட சுசீந்திரம் குளம் தற்போது ஆக்கிரமிப்பு மற்றும் மண், புதர் மண்டி குட்டை போல் காணப்படுகிறது. அதனால் அங்குள்ள விவசாயம் மற்றும் பறவைகள் சரணாலயம் அழியும் நிலையில் உள்ளது. சுசீந்திரம் குளத்திற்கு பழையாறு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள குளங்களில் இருந்து தண்ணீர் வந்து கொண்டே இருக்கும. இந்த குளம் எழில்மிகு குளமாகவே எப்போதும் தண்ணீர் நிறைந்து காணப்படும். இந்த குளத்தின் நீர் மணக்குடி கடல் பகுதியில் சென்று முடியும். குளத்தின் பயன்பாடு சுசீந்திரம் குளம் மூலம் அதனை சுற்றியுள்ள சுற்றுவட்டாரப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர் பயிரிடப்பட்டு விவசாயம் செய்யப்படுகிறது. இந்த குளத்தின் மூலம் பல குளங்கள் பயன்பெற்று விவசாயம் உள்ளிட்ட பல்வேறு பயன்களை பெற்று வருகின்றன. இந்நிலையில் சுசீந்திரம் குளத்திற்கு தண்ணீர் வழக்கம் போல் வந்தாலும், அங்கு தண்ணீர் தேங்க இடமில்லை. குளத்தின் பகுதிகள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. குளம் முழுவதும் புதர் மண்டி, மண்ணால் மூடப்பட்டு தண்ணீர் தேங்க முடியாத நிலையில் குட்டைபோல் மாறி ஓடை போல் காணப்படுகிறது. இந்த குளத்தின் நிலையால் பல குளங்களும் பாதிக்கப்பட்டு, விவசாயமும் குறைந்து வரும் நிலை உள்ளது. பறவைகள் சரணாலயம் குமரி மாவட்டத்தில் சுசீந்திரம், தேரூர் மற்றும் வேம்பனூர் சதுப்பு நிலங்கள் இந்தியாவின் தீபகற்பத்தின் தென்கோடியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த இயற்கை குளங்களின் வரலாறு பழமையானது, ஆனால் நீர்ப்பாசன வசதிகளுக்கு திருவாதாங்கூர் மன்னர்கள் பெரும் பங்களிப்பை வழங்கியதாக அறியப்படுகிறது. முக்கியமான பறவைகள் மற்றும் பல்லுயிர்ப் பகுதிகளை அடையாளம் காண்பதற்கு முன்னர் நிறுவப்பட்ட அளவுகோல்கள் மற்றும் வரம்புகளைப் பயன்படுத்தி அடையாளம் காணப்பட்ட சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய பல்லுயிர்ப் பகுதியாக இந்தத் தளம் தகுதி பெற்றுள்ளது. வெளிநாட்டு பறவைகள் இந்த குளத்திற்கு வெளி நாட்டுகளின் பறவைகள் வரத்து அதிகரித்த நிலையில் அங்கு பறவைகள் சரணாலயம் அமைக்கப்பட்டது. அதனால் உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் அங்கு எப்போதும்காணப்படும். பறவைகளை பாதுகாக்க அரசும் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. பறவைகள் வர காரணம் இந்த பறவைகள் சரணாலயத்திற்கு உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் வரத்திற்கு முக்கிய காரணம் அங்குள்ள தண்ணீர் ஆகும். மேலும், குளத்தின் நடுவே உள்ள சரணாலயத்தில் பாதுகாப்பாக தங்கள் இனப்பெருக்கத்தை வளர்த்துக்கொள்ள முடியும. சுற்றிலும் தண்ணீர் உள்ளதால் பறவைகளுக்கு எதிரிகளான கொடிய மிருகங்களிடம் இருந்து பாதுகாப்போடு தங்கள் இனப் பெருக்கத்தை நடத்த முடியும். மேலும் உணவிற்காக வேறு எங்கும் செல்ல வேண்டாம் அந்த குளத்திலேயே சிறியது முதல் பெரிய வகை மீண்கள், பூச்சிகள் உள்ளதால் உணவை அங்கேயே பறவைகள் பெற்றுக்கொள்ளலாம். பறவைகளுக்கான பாதுகாப்பு மேலும் அருகிலேயே விவசாய நிலங்கள், விவசாய பயிர்கள் உள்ளதால் தஙகளுக்கு தேவையான உணவை எளிதாக பெற முடியும். மொத்தத்தில் பாதுகாப்பாக பறவைகள் வாழக்கூடிய இடமாக திகழ்கிறது. இந்நிலையில் கடல் போல் காணப்பட்ட இந்த குளம் தற்போது சுறுங்கி குட்டைபோல் மாறி, ஓடைபோல் ஓடுகிறது. குளத்தின் மேற்கு பகுதியில் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. அதைப்போல் மேற்கிலிருந்து பாதி குளத்திற்கும் மேல் மண் நிறைந்து தண்ணீர் தேங்க முடியாத நிலையில் உள்ளது. மீதம் உள்ள பகுதி புதர் மண்டி கிடக்கிறது. எனவே, தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், நீர்வள ஆதாரத்துறையினர், வனத்துறையினர், சரணாலயத்துறையினர் இதனைக் கண்டு அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை தூர்வாரி தண்ணீர் தேக்கி விவசாயம் மற்றும் பறவைகள் சரணாலயத்தை காத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.