தமிழ்நாடு அரசு சார்பில் செம்மொழி இலக்கிய விருதுகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.
இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அளித்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு அரசு சார்பில் தேசிய அளவில் செம்மொழி இலக்கிய விருதுகள் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மகிழ்வுடன் வரவேற்கிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம், மராட்டியம் ஆகிய செம்மொழிகளில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படைப்புகளுக்கு தனித்தனியாக விருதுகள் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது பொருத்தமானது. இந்த விருதுகளை தேர்வு செய்ய சுயேச்சை தன்மை கொண்ட குழுக்கள் அமைக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
ஒன்றிய பாஜக கூட்டணி அரசு அனைத்து அமைப்புகளையும் தனது கைப்பாவையாக மாற்றி வருகிறது.
இந்தாண்டு சாகித்ய அகாடமிக்கான படைப்பாளிகள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஒன்றிய அரசு தலையிட்டு விருதுகள் அறிவிப்பதை நிறுத்தி வைத்துள்ளது; இதுவரை இந்த விருதுகள் அறிவிக்கப்படவில்லை.
தங்களது பிற்போக்கு கருத்துகளுக்கு ஆதரவானவர்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு கருதுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இந்த நிலையில், இந்தியாவின் பன்முகத்தன்மையை உயர்த்திப் பிடிக்கும் வகையிலும், பல்வேறு மொழிகளில் எழுதப்படும் இலக்கியங்களை அங்கீகரிக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முடிவு சிறப்பான ஒன்றாகும்.
அரசியல் சட்டத்தின் 8 ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகளை ஒன்றிய அரசின் அலுவல் மொழிகளாக அறிவிக்க ஒன்றிய அரசு மறுக்கிறது. தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளுக்கு குறைவான நிதியே ஒதுக்கும் நிலையில், சமஸ்கிருத மொழிக்கு மட்டும் கோடிக்கணக்கில் அள்ளித் தருகிறது.
அனைத்து மொழிகளையும் சமமாக நடத்துவதும், அங்கீகரிப்பதுமே இந்திய ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும். அந்த வகையில், தமிழ் மட்டுமின்றி ஏனைய மாநில மொழிகளில் வெளியாகும் படைப்புகளுக்கும் விருது வழங்குவது என்ற தமிழ்நாடு அரசின் முடிவு மொழி வெறுப்பரசியலுக்கு எதிரான ஒரு நடவடிக்கை என்ற வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
