சத்துணவு - அங்கன்வாடி ஊழியர்களின் வாழ்வுரிமை: தமிழக முதல்வர் கவனிப்பாரா?
தமிழகத்தில் பசிப்பிணி போக்கும் உன்னதப் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள். எம்.ஜி.ஆர். மற்றும் கலைஞர் ஆகியோரால் வளர்த்தெடுக்கப்பட்ட இத்திட்டங்களில் இன்று ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. 2018-ஆம் ஆண்டு முதல் புதிய நியமனங்கள் இல்லாததால், எஞ்சியுள்ள ஊழியர்கள் கடும் பணிச்சுமையால் திணறி வருகின்றனர். மறக்கப்பட்ட வாக்குறுதிகள் 2021 சட்டமன்றத் தேர்தலின் போது, தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையின் 313-வது வரிசையில் ஒரு தீர்க்கமான வாக்குறுதியை அளித்தது. “சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் அரசுப் பணியாளர்களாக முறைப்படுத்தப்பட்டு, காலமுறை ஊதியமும், குறைந்தபட்ச ஓய்வூதியமும் வழங்கப்படும்” என்பதே அந்த வாக்குறுதி. அதுமட்டுமன்றி, சென்னை ஜாக்டோ - ஜியோ மாநாட்டில் முதல்வர் அவர்களே கலந்துகொண்டு, நிதிநிலை சரியானதும் இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று ஐந்து ஆண்டுகள் நிறைவடையும் சூழலிலும், இந்த உறுதிமொழிகள் ஏட்டளவிலேயே இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. வறுமையின் பிடியில் ஓய்வூதியர்கள் தற்போது ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது வெறும் ரூ.2,000 சிறப்பு ஓய்வூதியம் மட்டுமே. இன்றைய விலைவாசி உயர்வில், ஒரு நாளைக்கு வெறும் 65 ரூபாயை வைத்துக்கொண்டு ஒரு முதியவர் எப்படி வாழ்வார்? இது அவர்கள் ஆற்றிய பணிக்கு அரசு செய்யும் மரியாதையா அல்லது ஏளனமா? 2017-க்குப் பிறகு கடந்த எட்டு ஆண்டுகளாக இந்தத் தொகையில் ஒரு பைசா கூட உயர்த்தப்படவில்லை. பணியிலிருக்கும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும் போதெல்லாம், அதே பணியைச் செய்து ஓய்வுபெற்ற எங்களை அரசு கண்டுகொள்ளாமல் கடந்து போவது ஏன்? சட்டப்படியான உரிமை ஓய்வூதியம் என்பது ஊழியர்களின் சட்டப்படியான உரிமை என உச்சநீதிமன்றம் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளது. 1983-ஆம் ஆண்டு ‘டி.எஸ். நகாரா’ வழக்கில் வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு, “ஓய்வுபெற்றவர்கள் கௌரவமான, சுயமரியாதையுடனான வாழ்க்கையை நடத்த வழிவகை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்துகிறது. ஓய்வூதியம் என்பது பணியின் போது நிறுத்தி வைக்கப்பட்ட “கொடுபடா ஊதியம்” (Deferred Wage) என்று நீதிமன்றம் வரையறுத்துள்ளது. இந்தச் சட்டபூர்வ உரிமையை மறுப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 14-க்கு எதிரானது இல்லையா? எமது நியாயமான கோரிக்கைகள் சமூக நலத்துறைச் செயலாளரிடம் நாங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் மிகவும் அடிப்படையானவை: • குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850/- ஆக உயர்த்தி வழங்கப்பட வேண்டும். • குடும்ப ஓய்வூதியம் மற்றும் விலைவாசி உயர்வை ஈடுசெய்ய அகவிலைப்படி வழங்க வேண்டும். • ஒட்டுமொத்தத் தொகை என்பதற்குப் பதிலாக ‘பணிக்கொடை’ (Gratuity) வழங்க வேண்டும். • மருத்துவக் காப்பீடு மற்றும் பொங்கல் போனஸ் உள்ளிட்ட சலுகைகளை நீட்டிக்க வேண்டும். தமிழக அரசு அண்மையில் புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ளது. கோடிக்கணக்கான ஏழைக் குழந்தைகளின் பசியாற்றிய இந்த “சத்துணவுத் தாய்மார்களின்” கண்ணீரைத் துடைக்க வேண்டிய கடமையும் அரசுக்கு உள்ளது. சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை வாட்டும் வறுமையை முதல்வர் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும்.
