விதிமீறி அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியை ரத்து செய்யக் கோரி சிஐடியு போராட்டம்
புதுச்சேரி, ஜன. 12- நெடுஞ்சாலை சட்ட விதிகளுக்குப் புறம்பாக அமைந்துள்ள சேலியமேடு சுங்கச்சாவடியை ரத்து செய்யக் கோரி சிஐடி.யு சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. நாகப்பட்டினம் - விழுப்புரம் நான்கு வழிச் சாலையில் அமைந்துள்ள இந்தச் சுங்கச்சாவடி, 60 கி.மீ தொலைவுக்கு ஒரு சுங்கச்சாவடி என்ற விதிக்கு மாறாக, வெறும் 28 கி.மீ தொலைவிலேயே அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் மற்றும் போக்குவரத்துத் தொழி லாளர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி வாகனங்களுடன் முற்றுகை நடைபெற்றது. சிஐடியு தனியார் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கச் செயலாளர் மதி வாணன் தலைமை தாங்கினார். மாநிலப் பொதுச் செயலாளர் சீனுவாசன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். போராட்டத்தின் போது புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கன் தொலைபேசி வாயிலாகப் பேச்சுவார்த்தை நடத்தினார். தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் பேசி இரண்டு தினங்க ளில் முடிவை அறிவிப்பதாக ஆட்சியர் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
