சென்னை:
பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதுதில்லி செல்கிறார்.தமிழ்நாட்டில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைமையிலான திமுக தனிப் பெரும் பான்மையுடன் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த மே 7 ஆம் தேதியன்று தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக் கொண்டார்.புதிய அரசு இயங்கத் தொடங்கியதில் இருந்தே, கொரோனா தொற்றின் எண்ணிக் கையை குறைப்பதிலும், அதனால் நடக்கும் மக்கள் இறப்பை தடுப்பதிலும் கடுமையாக போராடி வருகிறது.
இதற்கிடையே தடுப்பூசி பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை, கருப்பு பூஞ்சை தொற்று என புதிய புதிய தலைவலிகள் வரத் தொடங்கின. இதை மேலாண்மை செய்ய அரசு கடுமையாக போராடியது.தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பிறகே அரசுக்கு ஓரளவு வெற்றி கிடைக்கத் தொடங்கியது. எனவே வாரம் வாரம் ஊரடங்கு உத்தரவை படிப்படியாக தளர்த்தி, அதை அமல்படுத்துவதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.அந்த வகையில் தமிழகத்தில் ஒருநாள் தொற்றின் எண்ணிக்கை 36 ஆயிரம் என்ற நிலையில் இருந்து தற்போது 15 ஆயிரம் என்ற அளவுக்கு குறைந்து வந்துள்ளது. சற்று ஆசுவாசம் கிடைத்துள்ள இந்த நேரத்தில் மற்ற சில நடவடிக்கைகளில் இறங்க அரசுக்கு அவகாசம் கிடைத்துள்ளது.
இந்நிலையில், முதலமைச்சரான பிறகு, முதன் முறையாக பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் நேரடியாக சந்தித்து பேசுவதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனவே அதற்கான அனுமதியை பெற தமிழக அரசு முயற்சிகளை எடுத்துள்ளது.இந்த சந்திப்பின் போது தமிழக அரசு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை கொண்ட மனுவை பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளிப்பார்.தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியைத் தவிர குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோரையும் மு.க.ஸ்டாலின் சந் தித்து பேசுகிறார்.இந்த சந்திப்புகளுக் காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 16 ஆம் தேதியன்று சென்னையில் இருந்து தில்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார். 17 ஆம் தேதியன்று தலைவர்கள் அனைவரையும் சந்தித்து பேசுவார் என்று தகவல் கள் தெரிவிக்கின்றன.