சென்னை, செப்.16- தமிழ் திரைத்துறையைச் சேர்ந்த நடிகைகள் குறித்து சமூகவலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மருத்துவர் கந்தராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 13ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் விசாகா கமிட்டியின் தலைவர் ரோகிணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்திருந்தார், அதில் மருத்துவர் கந்தராஜ் என்பவர் சமூக வலைத்தளங்களில் தமிழ் திரைத்துறை நடிகைகள் குறித்து அவர்கள் வாய்ப்பிற்காக எந்த எல்லைக்கும் போவார்கள் போன்ற கருத்துக்களைக் கூறியதோடு மிகவும் இழிவாகப் பேசி வருகிறார். அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் பேசிய யூடியுப் வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் புகாரளித்திருந்தார்.
அதனைப்படையில் மருத்துவர் கந்தராஜ் மீது பெண்களின் மாண்பை அவமதிக்கும் வகையில் பேசுதல், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் ஒன்றிய குற்றப்பிரிவு சைபர் கிரைம் வழக்குப்பதிவு செய்துள்ளது.