அம்பத்தூர், மே 13-சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 3 வார்டு 24 பாரதிதாசன் நகரில்28 தெருக்கள் உள்ளன. இங்கு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இங்கு கோரைத் தெரு, மேட்டூர் தெரு இணைப்பில் உள்ள இரு மின்கம்பத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பல இடங்களில் மின் கம்பங்கள் பழுதாகி உடைந்து விழும் நிலையில் உள்ளன. மேலும்,சில இடங்களில் மின் கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மின்சார வாரியத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்பகுதியில் வசிக்கும் இளங்கோ கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மின் கம்பத்தை கூடுதலாக்க வேண்டும், ஒருமுனை மின்சாரமாக உள்ளதை, மும்முனை மின்சாரமாக மாற்றித்தர வேண்டும், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை மாற்ற வேண்டும் என்று பகுதி மக்கள் சார்பில் மனுகொடுத்தோம். அப்போதுபுழல் மின்சார வாரியத்தில்இருந்து இளநிலை பொறியாளர் மற்றும் போர்மேன் பொன்னுசாமி ஆகியோர் வந்து பார்வையிட்டு 15ஆவது தெருவில் உள்ள மின்கம்பங்களை மாற்றுவதாக கூறினார்கள். ஆனால் இதுவரை மாற்றவில்லை. தாழ்வாக மின்கம்பிகள் செல்வதால், கழிவுநீர் லாரிகள் வரும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்சார வாரியம் ஏதேனும்அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.