சென்னை:
மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத் தொழிலாளர்களை சட்டத்துக்குப் புறம்பானவகையில் சாதியாகப் பிரித்து - செயல்படுத்திடஎடுத்துவரும் முயற்சியை ஒன்றிய பாஜக அரசும் - ஊரக வளர்ச்சித் துறையும் கைவிடவேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கமும்- தலித் சோஷன் முக்தி மஞ்ச்சும்(DSMM) நாடு தழுவிய கண்டன இயக்கத்தினை ஜூன் 21 அன்று நடத்த விருக்கின்றன.இதையொட்டி, தமிழ்நாட்டிலும் அந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக்கிட வேண்டுமென இரண்டு இயக்கங்களும் வலியுறுத்தியுள்ளன.
இது தொடர்பாக அகில இந்திய விவசாயத்தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வி. அமிர்தலிங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:
ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித் துறை அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் ஊதியப் பட்டுவாடாவையும், வேலைஅளிக்கும் முறையிலும் பட்ஜெட் தயாரிப்பதற்கு தனித்தனியாக பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இதர சாதிவாரியான பட்டியலைக் கேட்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை தொழிலாளர்களை சாதிய ரீதியாகப்பிரிப்பதற்கும், நிதி ஒதுக்கீடு தனியாக செய்வதற்குமான ஏற்பாடாகும். ஒன்றிய அரசின் இந்த உழைப்பாளர் விரோத நடவடிக்கையை அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கமும் - தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் வன்மையாகக் கண்டிக்கிறது.இந்த அறிவிக்கையை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தில் வேலை வழங்குவதையும் - கூலி வழங்குவதையும் சாதிரீதியாகப் பிரிப்பது சமூகத்தில்மேலும் பிரச்சனைகளை உருவாக்கும் நடவடிக்கையாகும்.தொழிலாளர்களை பகுதி பகுதியாகப் பிரித்து - கூலி வழங்குவதன் மூலம் அனைவருக்கும் சம கூலி கிடைத்திட உத்தரவாதமற்ற நிலையையும், தாமதமின்றி ஒரே நேரத்தில் ஊதிய பட்டுவாடா செய்வதிலும் குழப்பங்கள் உருவாக்கிட வழிவகுக்கும்.ஒன்றிய பாஜக அரசின் இந்த ஆலோசனை ஊரக வேலை திட்டத்தின் அடிப்படை நோக்கத்துக்கும்-சமகூலி சட்டத்துக்கும் எதிரானதுடன், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின தொழிலாளர்களின் உரிமையை மறுக்கும் செயலாகும். அனைவருக்குமான நிதி செலவினக் கோட்பாட்டைமறந்து, புதிய பாகுபாட்டுடன் கூடிய நடைமுறையை செயல்படுத்துவதை ஒன்றிய அரசு கைவிடவேண்டும்.
அதோடு, கிராமப்புறப் பொருளாதாரம் நொறுங்கி துயரத்தில் தள்ளாடும் கிராமப்புற ஏழைகளை பாதுகாக்க 200 நாட்கள் வேலையும், தினக்கூலி ரூபாய் 600 ஆகவும் உயர்த்தி வழங்கிட வேண்டும். தாமதமின்றி ஊதியம் வழங்கிட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கமும் - தீண்டாமை ஒழிப்புமுன்னணியும் வரும் ஜூன் 21 அன்று மாவட்டத் தலைநகரங்களில் கொரோனா கால விதிகளைப் பின்பற்றி கண்டன இயக்கத்தை சக்தியாக நடத்திட வேண்டுமென கூட்டறிக்கையில் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.