காஞ்சிபுரம், ஏப்.25-பணி நீக்கம் செய்யப்பட்ட 28 தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும், ஊதிய உயர்வு மற்றும் தொழிலாளர் நல திட்டங்களை அமல்படுத்த தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 32 நாட்களாக அசாஹி கிளாஸ் இந்தியா நிறுவன தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வியாழனன்று (ஏப்.25) தடையை மீறி ஒருநாள் அடையாள உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை, மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.வாசுதேவன் துவக்கி வைத்தார். சிபிஎம் காஞ்சி நகரச் செயலாளர் சி.சங்கர், திருப்பெரும்புதூர் பகுதிச் செயலாளர் பி.ரமேஷ், உழைக்கும் பெண்கள் சங்கஒருங்கிணைப்பாளர் ஜி.வசந்தா, நோபில்டெக் சங்க நிர்வாகி சண்முகம், கைத்தறி சங்க நிர்வாகி ஜி.எஸ்.வெங்கடேசன், முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் தாஸ், சோவெல் இந்தியா நிறுவன சங்க நிர்வாகி ரஜினி, அப்போலோ நிறுவன தொழிற்சங்க நிர்வாகி யுவபிரசாத் உட்பட பலர் பேசினர். உண்ணாநிலைப் போராட்டத்தை சிஐடியு மாநிலச் செயலாளர் முத்துக்குமார் முடித்துவைத்தார்.