tamilnadu

img

ஜாக்டோ - ஜியோ 72 மணி நேர உண்ணாநிலை.... பந்தலை அகற்றி அராஜகமாக தாக்கி கைது செய்த காவல்துறை.....

சென்னை:
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி 72 மணி நேர தொடர் உண்ணாநிலை போராட்டத்திற்கு வந்த தலைவர்களை காவல்துறையினர் அராஜகமாக கைது செய்தனர்.அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியா ளர்கள், நூலகர்கள், எம்.ஆர்.பி செவிலியர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்டு தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் 3.50 லட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

21 மாத ஊதிய நிலுவையை வழங்க வேண்டும், ஊரடங்கு காலத்தில் பறிக்கப்பட்ட சலுகைகளை திரும்பத் தர வேண்டும், அவுட்சோர்சிங் முறை மற்றும்ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிடவேண்டும், ஒருங்கிணைந்த நிதி மற்றும்மனிதவள மேலாண்மைத்திட்டத்தை கைவிட வேண்டும், 4.50 லட்சம்காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ  சார்பில்திங்களன்று (பிப்.8) சென்னையில் மாநிலஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்கும் உண்ணாநிலை போராட்டம் நடைபெறும். மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டிருந்து.

தாக்கி கைது
இதன்படி, சென்னை எழிலகம் வளாகத்தில் நடைபெற இருந்த போராட்டத்திற்கான தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப் பாளர்கள் மற்றும் ஊழியர்களை காவல்துறையினர் அராஜகமான முறையில்கைது செய்ததோடு, போராட்டப் பந்தலையும் அகற்றினர். போராட்டத்திற்கு வந்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு.அன்பரசு, பொதுச்செயலாளர் ஆ.செல்வம் ஆகியோரை தாக்கி கைது செய்தனர்.ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப் பாளர்கள் சி.சேகர் (தமிழ்நாடு தொடக்க நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம்), கு. வெங்கடேசன் (தலைமைச் செயலகம்), ச. மோசஸ் (தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி), ப. குமார் (தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம்), கே.பி.ஓ. சுரேஷ் (தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம்), அ. வின்சென்ட் பால்ராஜ் (தமிழக ஆசிரியர் கூட்டணி), இரா. தாஸ் (தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி), சி. சங்கர பெருமாள் (தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம்), கு.தியாக ராஜன் (தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்), புலவர் ஆ. ஆறுமுகம் (தமிழக தமிழாசிரியர் கழகம்), ஜெ.காந்திராஜன் (கல்லூரி ஆசிரியர்), சு. பக்தவச்சலம் (தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம்), நா. சண்முகநாதன் மற்றும் இலா. தியோடர் ராபின்சன் (தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்) உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

உண்ணாநிலை தொடரும்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மு.அன்பரசு, “முதலமைச்சர் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். காவல்துறை கைது செய்திருந்தாலும் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கியுள்ளோம். எனவே, திட்டமிட்டபடி 72 மணி நேரம் நடைபெறும். சிறைக்கு கொண்டு சென்றாலும் உண்ணாநிலை தொடரும்” என்றார்.

ரூ.30 ஆயிரம் கோடி பறிப்பு
ஜாக்டோ - ஜியோ செய்தி தொடர்பாளர் கு.தியாகராஜன் குறிப்பிடுகை யில், “பொதுமக்கள் பாதிக்காத வகையில், அறவழியில் போராடுவதற்கு கூடதமிழக அரசு அனுமதிக்காமல், மாநிலஒருங்கிணைப்பாளர்களை அராஜகமான முறையில் கைது செய்துள்ளது. தேன் கூட்டில் தமிழக அரசு கை வைத்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரி யர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்ந்து ஆட்சியில் இருந்தது இல்லை. இதற்கான எதிர்வினையை அதிமுக அரசு சந்திக்க நேரிடும்.2019 போராட்டத்தின் போதுமேற்கொள்ளப்பட்ட ஒழுங்குநடவடிக்கைகளை திரும்பப் பெறுவதாக அரசு அறிவித்திருப்பது வழக்கமான ஒன்றுதான். இதன்மூலம் தமிழக அரசு நாடகம் நடத்துகிறது. புதிதாக எந்த ஒரு கோரிக்கையும் வைக்கவில்லை. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கொடுத்ததை போன்று 21 மாத நிலுவையை வழங்க வேண்டும், நிலுவைகள்,சலுகை பறிப்பு என அரசு ஊழியர்கள் ஆசிரியர்களிடமிருந்து தமிழக அரசு பறித்துள்ள 30 ஆயிரம் கோடி ரூபாயை திருப்பித் தரக் கோரி போராடுகிறோம்” என்றார்.

7வது நாளாக மறியல் - கைது
இதே கோரிக்கையை வலியுறுத்தி பிப்.2 முதல் தொடர் மறியல் - சிறை நிரப்பும் போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நடத்தி வருகிறது. 7வது நாளாக திங்களன்றும் (பிப்.8) தமிழகம் முழுவதும் தொடர் மறியல் - சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.இதன் ஒருபகுதியாக சென்னை எழிலகம் வளாகம் அருகே உள்ள வாலாஜா சாலையில் வடசென்னை மாவட்டத் தலைவர் சுந்தரம்பாள் தலைமையில் மறியல் நடைபெற்றது. போராட்டத்தை மாநிலச் செயலாளர் நம்பிராஜன் தொடங்கி வைத்தார். மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறை யினர் இழுத்து சென்று கைதுசெய்தனர்.