சென்னை:
கலை இலக்கியம் பண்பாட்டு வளர்ச்சிக்கான தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் வரவேற்றுள்ளது.இதுகுறித்து சங்கத்தின் மாநிலத்தலைவர் (பொறுப்பு) மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்ச்சமூகத்தின் கலை இலக்கியம், மொழி வளர்ச்சி, பண்பாட்டு தனித்துவம், அறிவியல் கண்ணோட்டம் ஆகியவற்றை வலுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம் வரவேற்கிறது. தமிழின் தொன்மையான இலக்கிய நூல்களைப் பதிப்பித்து சமகாலத் தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பது, பள்ளி மாணவர்களின் தமிழ்மொழி இலக்கியத்திறனை வளர்க்க ஊக்கத்தொகை, திருக்குறள் முற்றோதும் மாணவர்கள் அனைவருக்கும் உயர்த்தப்பட்ட அளவில் பரிசுத்தொகை, இளம் எழுத்தாளர்களுக்கு கவிமணி விருது, மூத்த எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடமையாக்கம், சங்க இலக்கிய வாழ்வியலை எடுத்துரைக்கும் காஃபி மேசை புத்தகங்கள் வெளியீடு, மறைந்த தமிழறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் நினைவிடங்களில் அவர்களது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு நிதிநல்கை, தமிழ் சிந்தனை மரபை உருவாக்கி வளர்த்த முன்னோடிகளில் ஒருவரான அயோத்திதாசருக்கு மணிமண்டபம், ஆண்டுதோறும் சென்னையில் பொங்கல் கலைவிழா, கலைமாமணி விருது பெற்ற வறிய நிலையிலுள்ள கலைஞர்களுக்கான உதவித்தொகை இரட்டிப்பு, விரிவான விரைவான தொல்லியல் ஆய்வுகள், கல்வெட்டுகள் மற்றும் பாறை ஓவியங்கள் பாதுகாப்பு, பள்ளிக்குழந்தைகளுக்கு நாட்டுப்புறக் கலைகள் பயிற்றுவிப்பு, சங்க இலக்கியங்களை சந்தி பிரித்து நூல்களாக வெளியிடுவது, திராவிட கருத்தாக்கத்தை தொகுத்து திராவிட களஞ்சியம் என்ற பெயரில் வெளியிடுவது, மேம்படுத்துவது ,பழந்தமிழ் இலக்கிய நூல்களையும் சமகால இலக்கிய நூல்களையும் ஒலி நூல்களாக வெளியிடுவது - ஆகியவை உள்ளிட்டு அடுத்தடுத்து வெளியாகும் அறிவிப்புகள் கலை இலக்கியச் சமூகத்தினரிடம் புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளன. ஆக்கப்பூர்வமான இவ்வறிவிப்புகளை குறிப்பிட்ட காலவரம்பிற்குள் நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு ஆவன செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.