tamilnadu

img

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு! பாஜக அரசின் பாரபட்சமான முடிவிற்கு சிபிஎம் கடும் கண்டனம்!

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி மறுத்த பாஜக அரசின் பாரபட்சமான முடிவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அளித்துள்ள அறிக்கை வருமாறு:

மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழ்நாட்டின் மிக முக்கிய நகரங்களான கோவை மற்றும் மதுரை ஆகிய இரண்டு மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற முடியாது என அறிவித்திருக்கிறது. ஒன்றிய பாஜக அரசின் பாரபட்சமான இத்தகைய நடவடிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும். 2017ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட தேசிய மெட்ரோ ரயில் திட்டக் கொள்கையின் படி 20 லட்சத்திற்கும் அதிகமான மக்களை கொண்ட மாநகரங்களுக்குத்தான் மெட்ரோ ரயில் திட்டத்தை வழங்க முடியும் எனவும், தமிழக நகரங்களான கோவை மற்றும் மதுரையின் மக்கள் தொகை 20 லட்சத்திற்கும் குறைவாக இருப்பதால் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற முடியாது என ஒன்றிய பாஜக அரசு மறுத்திருக்கிறது.

பாஜக அரசின் இத்தகைய அறிவிப்பு மிகவும் மோசடியான ஒன்றாகும். ஏனெனில் கடந்த 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பைக் கொண்டே இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. கோவை மற்றும் மதுரை ஆகிய மாநகரங்களில் கடந்த 15 ஆண்டுகளில் அதிகரித்துள்ள மக்கள் தொகை மற்றும் இரண்டு மாநகராட்சிகளின் எல்லைகள் சமீபத்தில் விரிவாக்கப்பட்டிருக்கும் நிலை ஆகியவற்றையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்திருப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.  மேலும், பாஜக ஆளும் மாநிலங்களில் மக்கள் தொகை குறைவாக உள்ள வேறு பல நகரங்களுக்கு அனுமதி அளித்திருக்கும் நிலையில் தமிழ்நாட்டிற்கு மட்டும் அனுமதி மறுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இது கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு எதிரானது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான வளர்ச்சிக்கு நிதி ஒதுக்காமல் முட்டுக்கட்டை போடுவது, தமிழ்நாட்டிற்கான ஜி.எஸ்.டி நிதி ஒதுக்கீடு விஷயத்தில் பாரபட்சம் காட்டுவது, மதுரை எய்ம்ஸ் திட்டத்தை கிடப்பில் போடுவது என தொடர்ந்து பாஜக தமிழ்நாட்டை வஞ்சித்து வருவதன் தொடர்ச்சியாகவே மெட்ரோ ரயில் திட்ட அனுமதி மறுப்பு அறிவிப்பும் உள்ளது. எனவே அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இப்பிரச்னையை அணுகுவதை கைவிட்டு, கோவை மற்றும் மதுரை ஆகிய மாநகர மக்களின் தேவை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு இவ்விரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை உடனடியாக துவங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஒன்றிய பாஜக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.