tamilnadu

img

வெள்ளை அறிக்கையின் விபரங்களும் போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் வேண்டுகோளும்....

சென்னை:
தமிழக நிதிநிலை சம்பந்தமாக வெளியிடப்பட்ட வெள்ளையறிக்கையில் போக்குவரத்துக் கழகங்கள் சம்பந்தமாக கூறப்பட்டுள்ள சில விபரங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் நிதிநிலை அறிக்கையில் போக்குவரத்து கழகங்களுக்கு வரவுக்கும்-செலவுக்குமான வித்தியாசத்தொகையை வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் கோரியுள்ளது.

இது தொடர்பாக சம்மேளனத்தின் தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார் ஆகியோர் தமிழக நிதியமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவின் விபரம் வருமாறு: 

தமிழக அரசின் நிதிநிலை சம்பந்தமாக தங்களால் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரசின்செயல்பாடுகளை அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும் அடிப்படையில் “வெள்ளை அறிக்கை” வெளியிடப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க நடவடிக்கை ஆகும்.ஆனால் இந்த வெள்ளை அறிக்கையில் போக்கு வரத்துக் கழகங்களின் செலவினம் சம்பந்தமாக வழங்கப்பட்டுள்ள சில விவரங்களில் மாறுபாடு உள்ளது. அதேபோல் கழகங்களின் செயல்பாடு மற்றும்ஊழியர்களின் ஊதியம் சம்பந்தமான உண்மை நிலைமையை பிரதிபலிக்கும் அடிப்படையில் வெள்ளை அறிக்கை இல்லை என்பதை தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

இயக்கச் செலவு...
வெள்ளை அறிக்கையில் பக்கம் 91ல் 1 கி.மீட்டருக்கான இயக்கச் செலவு ரூ.96.75 என குறிப்பிடப்பட்டுள்ளது.  2020 மார்ச் முதல் கொரோனா காரணமாக பேருந்து இயக்கம் முழுமையாக நிறுத்தப்பட்டு, பின் பகுதியளவு இயக்கப்பட்டது. இரண்டாவது அலையின்போதும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.  இன்னும்இயல்புநிலை திரும்பவில்லை.  எனவே தங்களது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள அடிப்படையில் 2019-2020 ஆண்டைத்தான் ஒப்பீட்டுக்காக எடுத்துக்கொள்ள வேண்டும். 2019-20ஆம் ஆண்டில் 1 கி.மீட்டருக்கான இயக்கச் செலவு சுமார் ரூ.55 முதல் ரூ.60க்குள்ளேயே இருந்தது. இந்நிலையில் 1 கி.மீட்டருக்கு 96.75 இயக்கச் செலவு என குறிப்பிட்டுள்ளது எந்த அடிப்படையில் என்று புரியவில்லை. ஒரு கி.மீட்டருக்கான இழப்பு சுமார் ரூ.18 முதல்  ரூ.25 மட்டுமே.  ஒரு கிலோ மீட்டருக்கான இழப்புரூ. 59.15 என்பது சரியல்ல.  எனவே ஆவணங்கள் அடிப்படையில் இதை சரி செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

மாணவர்கள் இலவச பயணத் திட்ட நிதி
தமிழக மாணவர்களுக்கான பேருந்துப் பயணச்சலுகைக்கு அரசு மானியம் வழங்குவதாக அறிக்கையின்பல பகுதிகளில் கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் கல்வி வசதியை மேம்படுத்த அரசுப் பேருந்துகளில் மாணவர்களுக்கு இலவச பயணத்திட்டம் அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. போக்குவரத்துக் கழகங்கள் அரசால் நடத்தப்படும் தனித்துறை. கல்வித்துறைக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. அரசின் அறிவிப்புப்படி கட்டணமின்றி பயணிக்கும் மாணவர்களுக்கு உரிய தொகையை அரசு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்படும் தொகையை மானியம் என்று கூறுவது சரியற்றது. அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதால் கழகங்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை, அரசு திருப்பி செலுத்திய தொகை (Reimbursement) ஆகும்.  இது மானியம் அல்ல.  அரசு கொடுக்கும் தொகையும் உண்மை மதிப்பில் 56 சதவீதம் மட்டுமே. கட்டணத்தில் 44 சதவீதத்தை சமூக பொறுப்பு என்ற அடிப்படையில் கழகங்களே ஏற்றுக் கொள்கின்றன.

இலவச பயணம் அறிவிக்கப்பட்ட காலத்தில் இருந்து வழங்க வேண்டிய 56 சதவீதம் தொகையைக்கூட பல ஆண்டுகளாக அரசு முழுமையாக வழங்கவில்லை. போக்குவரத்துக் கழகங்கள் நிதிப்பற்றாக்குறையில் உள்ள நிலையில் அரசு வழங்க வேண்டிய தொகையை முழுமையாக வழங்க வலியுறுத்தி போக்குவரத்து துறையின் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. 2019-20ஆம் ஆண்டு நிதிநிலையறிக்கையில்தான் அரசாணை அடிப்படையில் முழுமையாக வழங்கப்பட்டது.  அத்துடன் 2011 முதல் 2019 வரை கழகங்களுக்கு அரசு வழங்க வேண்டியபாக்கி தொகை ரூ. 2195.55 கோடியை வழங்க கடந்த 26.2.2021ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதன் காரணமாகவே 2020-21ஆம் ஆண்டில் 3728.20கோடி வழங்கப்பட்டதாக கணக்கில் உள்ளது. (பக்கம் 93 அட்டவணை  60) 

2011ஆம் ஆண்டு அதிமுக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தியது. ஆனால் தொடர்ந்து டீசல் விலை உயர்ந்து வந்தது. டீசல் விலை உயர்வு காரணமாக கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என அறிவித்துகடந்த 2011ஆம் ஆண்டு முதல் ‘டீசல் மானியம்’ வழங்கப்பட்டு வருகிறது.

இழப்பு நிதி வழங்குவது மானியமல்ல
அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள அடிப்படையில் லாபம் ஈட்டா வழித்தடங்களில் சுமார் 8000க்கும்மேற்பட்ட நகர் பேருந்துகள் மற்றும் மலை வழித்தடப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.கிராமப்புறங்களுக்கு நகரப் பேருந்துகள் இயக்குவதும், மலைக் கிராமங்களுக்கு பேருந்து இயக்குவதும் லாப நோக்கமின்றி சேவை அடிப்படையிலேயே இயக்கப்படுகின்றன. கிராமப்புறங்களுக்கு பேருந்து வசதி கொடுக்கப்பட்டதால், கிராமப்புற மாணவர்கள் நகர்ப்புறத்திற்கு வந்து படிக்கும் வசதி கிடைத்தது. மேலும் கிராமப்புறத்தில் இருக்கும் உடலுழைப்பு தொழிலாளர்கள் நகர்ப்புறத்தில் வந்து வேலை செய்வதற்கு வாய்ப்பை உருவாக்கித் தந்தது. நகர்மயமாதல் பெருகியது. போக்குவரத்துக் கழகங்களால் தமிழகத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரிய பங்களிப்பை செலுத்த முடிந்தது. சமூக நீதி அடிப்படையில் தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு போக்குவரத்து கழகங்கள் மிகப்பெரிய சேவையாற்றி வருகின்றன. 

சமூக நோக்கத்தோடு சேவை அடிப்படையில் லாபமில்லை என்று தெரிந்தே இயக்கப்படும் பேருந்துகளுக்கான இழப்பை அரசு வழங்க வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இது போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கும் மானியம் அல்ல. கல்வி, சுகாதாரம், பொதுவிநியோக திட்டம் போல் தமிழக மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த அரசு வழங்கும் தொகையாகும்.

திமுக ஆய்வுக்குழுவின் அறிக்கையின் பரிந்துரை
2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக நாள் ஒன்றுக்கு 2 கோடிக்கும் மேல் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை 1 கோடியே 60 லட்சமாக குறைந்தது.  அதிகக் கட்டணம் காரணமாக பயணத்தை தவிர்க்கும் நிலைக்கு தமிழக மக்கள் உள்ளானதுதான் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு மிக முக்கியமான காரணமாகும்.கட்டண உயர்வைக் கைவிட அனைத்து எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தின. போக்குவரத்துக்கழக நிர்வாகத்தை சீரமைப்பது சம்பந்தமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒரு ஆய்வுக்குழுவும் அமைக்கப்பட்டது. அந்த ஆய்வுக்குழுவின் அறிக்கையை திராவிட முன்னேற்றக் கழகம் அரசிடம்சமர்ப்பித்தது. அக்குழுவின் அறிக்கை கட்டண உயர்வு லாபத்தை ஈட்டித்தராது எனக் குறிப்பிட்டுள்ளது. போக்குவரத்துக் கழகங்களை கல்வி, மதிய உணவு, பொது விநியோகம் போன்று சேவையாகக் கருதி, அரசு நிதி அளிக்க வேண்டும் என பரிந்துரை செய்ததை தங்களது கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். 

வெள்ளை அறிக்கையில் அதிக ஊதியம் மற்றும்ஓய்வூதியச் செலவினம் இழப்புக்கு காரணம் என கூறப்பட்டுள்ளது. 1 பேருந்துக்கு சேமப்பணியாளர்களையும் சேர்த்து 7.18 என்ற எண்ணிக்கையில் பணியாளர் இருக்க வேண்டும் என அரசு முடிவு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால் தற்போது 6.34 என்ற அளவிலேயே அதை விடக் குறைவான பணியாளர்களே தற்போது உள்ளனர். 15000க்கும் மேற்பட்டகாலிப்பணியிடங்கள் உள்ளன.  கடும் வேலைப்பளுவிற்கு மத்தியில் விடுப்பு கூட எடுக்க முடியாத நிலையில்தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

ஆச்சரியமளிக்கும் விபரம்
வெள்ளை அறிக்கை படம் 23ல் நிர்வாகச் செலவு 2011-2012ஆம் ஆண்டில் 44 பைசா எனவும், 2019-20ல் 57 பைசா எனவும் கூறப்பட்டுள்ளது. (அதாவது சம்பளம் உள்ளிட்ட செலவுகள் 29 சதவீதம் உயர்ந்துள்ளது) ஆனால் அட்டவணையில் 58ல் 119 சதவீதம் நிர்வாகச் செலவு கூடியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது ஆச்சரியம் அளிக்கிறது. தற்போது போக்குவரத்துக் கழகங்கள் ஊதியத்திற்கு செலவிடும் தொகை மாதம் சுமார் ரூ.450 கோடி மட்டுமே. இந்நிலையில் வருடத்திற்கு ரூ.8235 கோடி (அட்டவணை 58) நிர்வாகச் செலவு ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளது எதன் அடிப்படையில் என்பது புரியவில்லை.  தமிழகத்தில் உள்ள அரசுமற்றும் பொதுத்துறை ஊழியர்களைவிட மிகக் குறைவான ஊதியமே போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அட்டவணை 58இல் ஓய்வூதியச் செலவு 365 மடங்குகூடிவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  கடந்த 2011-12ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 30 ஆயிரம் பேர்.  2020-21இல்ஓய்வுபெற்றோர் எண்ணிக்கை சுமார் 85 ஆயிரம் பேர்.  இந்நிலையில் ஓய்வூதியச் செலவு கூடுதலாவதுதவிர்க்க முடியாதது.  அட்டவணையில் குறிப்பிட்ட அடிப்படையில் பார்க்கும்போது தவறான கண்ணோட்டம் வருவதற்கே வாய்ப்புள்ளது.  ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்வே அளிக்கப்படவில்லை. எனவே, வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விபரங்கள் உண்மை நிலையை முழுமையாக தெளிவுபடுத்தும் நிலையில் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
போக்குவரத்துக் கழகங்களுக்கு உள்ள கடன் 30000 கோடியில் சுமார் 9000 கோடி ரூபாய் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடைமற்றும் நிர்வாகம் வழங்க வேண்டிய நிலுவைத்தொகைகளாகும்.

பணியாளர்களின் செயல்பாடும் செலவுக் குறைவும்
மிகக் குறைவான ஊதியம், வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியப் பலன்கள் கூட காலத்தில் பெற முடியாதகடும்சூழலிலும் போக்குவரத்து ஊழியர்கள் மிகச் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர். படம் 23 அதை தெளிவுபடுத்தும். கடந்த 2011ஆம் ஆண்டு 1 ரூபாயில் டீசலுக்கு செலவிடும் தொகை 32 பைசாவாக இருந்தது. தற்போது அது 25 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு மிக முக்கியமான காரணம் மிக திறமையான ஓட்டுநர், நடத்துனர்களின் செயல்பாடே ஆகும். அதிக அளவில் டீசல் சேமிப்பிற்காக அகில இந்திய அளவில் போக்குவரத்துக் கழகங்கள் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளன. அதே போல 2011-2012ஆம் ஆண்டில் உதிரிப்பாகங்களுக்காக செலவிட்ட தொகை 1 ரூபாய் வருமானத்தில் 5 பைசா. அதுவும் 2 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப பணியாளர்களின் மிகச் சிறந்த பராமரிப்பு திறனே இதற்கு காரணமாகும்.

செயல்பாட்டை மேம்படுத்த
தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சியில் முக்கியமான பங்கை ஆற்றி வரும் போக்குவரத்துக் கழகங்களின் சேவை மேம்பட்ட முறையில் தமிழகமக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.  போக்குவரத்துக் கழகங்கள் சேவைத்துறை என்ற அடிப்படையில் கழகங்களின் வரவுக்கும்-செலவுக்கும் உரிய வித்தியாசத்தொகையை அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிவழங்க வேண்டும்.  போக்குவரத்துக் கழகங்களின்செயல்பாட்டை மேம்படுத்த அரசு தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.  அதிகாரிகளின் எண்ணிக்கை முறைப்படுத்தப்பட வேண்டும்.  சகோதர போக்குவரத்துக் கழகங்களுக்குள் ஏற்படும் தேவையற்ற போட்டியை முழுமையாக கைவிட வேண்டும்.  சட்டவிரோதமாக இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் போக்குவரத்துக்கழக வழித்தடங்களில் இயங்குவதை தடுக்க வேண்டும்.

தனியாருக்குச் சாதகமான வண்டிகளின் நேரங்களை மாற்றியமைத்ததை ரத்து செய்ய வேண்டும்.  உதிரிப்பாகங்கள் வாங்குவது உள்ளிட்டவிசயங்களை முறைப்படுத்த வேண்டும்.  லாபகரமான வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  புறநகர் பேருந்துகளில் கட்டணச் சீரமைப்பு செய்ய வேண்டும்.  போக்குவரத்துக் கழகங்களின் அனைத்து செயல்பாடுகளுக்கும் முறையான வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.  அதிகாரிகள் தங்களுக்கு ஏற்ற அடிப்படையில் விதிமுறைகளை மாற்றுவதை அனுமதிக்கக் கூடாது.  தொழிலாளர்கள் மத்தியில் பாகுபாடற்ற முறையில் நிர்வாகம் நடப்பதை உறுதிப்படுத்த வேண்டும். கழகத்தின் வளர்ச்சி சம்பந்தமாக தொழிற்சங்கங்களோடு அவ்வப்போது விவாதித்து பொருத்தமான முடிவுகள் மேற்கொள்வதன் மூலம் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாட்டை சிறப்பாக்க முடியும்.  

மேற்கண்ட சூழ்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பட்ஜெட்டில் போக்குவரத்து கழகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை போதுமானதல்ல.  கழகங்களின் வரவுக்கும்-செலவுக்குமான வித்தியாசத்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.   அத்துடன் போக்குவரத்துஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் முடிந்து இரண்டுஆண்டுகள் ஆன நிலையில், புதிய ஒப்பந்தத்தைப்பேசி இறுதிப்படுத்த வேண்டும்.  தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைகள், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு போன்ற நீண்டகாலமாக தீர்க்கப்படாத பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும்.இந்த மனுவின் நகல்கள் போக்குவரத்து அமைச்சர், நிதித்துறை செயலாளர், கூடுதல் முதன்மைச்செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.