எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு 2025-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாகச் சங்கத்தின் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர் களப்பிரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
''அரை நூற்றாண்டாகத் தமிழ் எழுத்துலகில் தொடர்ந்து இயங்கிவருபவர் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன். சிறுகதை தொடங்கி இலக்கியம், பண்பாடு, கல்வி, அறிவியல், பெண்ணியம், அரசியல், வரலாறு எனப் பன்முகத் தலைப்புகளில் கட்டுரைத் தொகுப்புகள், சிறார் இலக்கியங்கள் என 16 பக்கங்கள் தொடங்கி 1000 பக்கங்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்; தொடர்ந்து எழுதியும் வருகிறார். எழுதுவதோடு நில்லாமல், பல்வேறு இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்பது, இலக்கிய உலகிற்குள் சரியான உரையாடல்களை நிகழ்த்துவது, புதிதாக எழுத வரும் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்துவது என அன்றாடம் இயங்கும் இலக்கிய ஆளுமையாகவும் அவர் திகழ்கிறார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர், தலைவர், மதிப்புறு தலைவர் எனப் பல்வேறு பொறுப்புகளில் திறம்படச் செயலாற்றியதோடு, தற்போதும் தமுஎகசவின் முன்னணித் தலைவராகச் செயல்பட்டு வருகிறார். செம்மலர், புதிய புத்தகம் பேசுது, புதுவிசை உள்ளிட்ட பல்வேறு இலக்கிய இதழ்களின் ஆசிரியர் குழுவிலிருந்து சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்.
இன்று அவருக்கு 2025-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த டிசம்பர் 18-ஆம் தேதியே அறிவிக்கப்படவிருந்த இவ்விருது அறிவிப்பு, பல்வேறு தடைகளைத் தாண்டி இன்றைக்கு வெளிவந்துள்ளது. இந்த விருது பல ஆண்டுகளுக்கு முன்பே ச. தமிழ்ச்செல்வனுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
இருந்தபோதும், "முதல் 50 ஆண்டுகள் - தமிழ்ச்சிறுகதையின் தடங்கள்" என்னும் பொருத்தமான அவரது இலக்கிய வரலாற்று-விமர்சன நூலுக்கே இப்போது இவ்விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. நூற்றாண்டிற்கும் மேலான தமிழின் எல்லாச் சிறுகதைப் போக்குகளின் வாசிப்பும், அது குறித்த உழைக்கும் வர்க்கம் சார்ந்த மதிப்பீடும், அதைத் தற்கால இலக்கியவாதிகளோடு தொடர்ந்து பொருத்தி உரையாடும் நேர்த்தியும், அதன் வரலாற்றைத் தற்காலத் தலைமுறைக்குக் கடத்துதலும் எனச் சிறுகதை உலகத்தில் சஞ்சரிக்கும் எழுத்தாளராகச் ச. தமிழ்ச்செல்வன் இருக்கிறார்.
அந்த வகையில் ச. தமிழ்ச்செல்வனுக்கான 2025-ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது குறித்துத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் உளமார மகிழ்ச்சி கொள்கிறது. விருது பெற்ற தோழருக்கு மாநிலக்குழுவின் சார்பாக வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்கிறோம்.'' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
