துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல் நடந்ததைத் தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனம் துபாயிலிருந்து இந்தியா வரும் தனது பல விமான சேவைகளை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
ஈரானிலிருந்து நடத்தப்பட்டதாக கூறப்படும் ட்ரோன் தாக்குதலால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, துபாய் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, துபாயிலிருந்து இந்தியாவுக்கு இயக்கப்படவிருந்த ஏர் இந்தியாவின் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே முன்பதிவு செய்துள்ள பயணிகள் தங்களின் பயணத் தேதியை மாற்றிக் கொள்ளலாம் அல்லது முழு கட்டணத்தைத் திரும்பப் பெற பயணத்தை ரத்து செய்து கொள்ளலாம் என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
மேலும், துபாய் சர்வதேச விமான நிலையத்துக்குச் செல்லும் முக்கியமான நான்கு சாலைகளும் பாதுகாப்பு காரணங்களால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நிலைமை சீராகிய பிறகே விமான சேவைகள் மீண்டும் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
