சென்னை:
தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு செப்டம்பர் மாதம் வரை இலவசமாக வழங்க அரிசி, பருப்பு வகைகளை கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொது விநியோகத் திட்டம் தொடர்பாக மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானுடன், தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அமைச்சர் காமராஜ் பேசுகையில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களின் சில பகுதிகளில் முழு ஊரடங்கு ஜூன் 19 முதல் 30 ஆம் தேதி வரை அமல்படுத்தப்படுகிறது. இதனால் அப்பகுதிகளில் உள்ள அனைத்து அரிசி குடும்பஅட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுகிறது. கடந்த ஜூன் 12 ஆம் தேதி, தமிழக முதல்வர், தமிழகத்தில் வரும் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு தேவையான அரிசி, பருப்பை கூடுதலாக ஒதுக்க வேண்டும் என தங்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கூடுதல் தானியங்களை ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில், தமிழக உணவுத் துறைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் எம்.சுதாதேவி, உணவுப் பொருள் வழங்கல் ஆணையர் சஜ்ஜன்சிங் சவான் ஆகியோர் கலந்துகொண்டனர்.