tamilnadu

img

விமான சாகச நிகழ்ச்சி: 4 பேர் உயிரிழப்பு

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய விமானப் படை தொடங்கப்பட்டு 92-ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், விமானப் படையின் சார்பில் விமான சாகச நிகழ்ச்சி இன்று நடத்தப்பட்டது.

காலை 11 முதல் மதியம் 1 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை, மெரினாவில் 4 லட்சம் மக்களும், மெரினா சாலைகள், பட்டினப்பாக்கம், பெசன்ட்நகர், கொட்டிவாக்கம், நீலாங்கரை, பாலவாக்கம் போன்ற இடங்களில் 6 லட்சம் பேரும் விமான சாகச நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர்.

விடுமுறை தினம் என்பதால் மக்கள் கூட்டம் அதிகரித்தே காணப்பட்டது. மெரினா கடற்கரை, ரயில்வே நிலையங்கள், முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விமானப் படை சாகச நிகழ்ச்சியைக் காண காலை முதலே மக்கள் மெரினாவில் கூடத் தொடங்கினர். காலையில் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்த நிலையில், நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரித்தது.

பிற்பகல் 1 மணி வரை நிகழ்ச்சி நடைபெற்றதால், கூட்ட நெரிசலில் சிக்கி பலர் அவதியுற்றனர். மயக்கம் அடைந்தவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

மயக்கம் அடைந்து மருத்துவனையில் சிகிச்சைப் பெற்றுவந்த தினேஷ்குமார்(37), சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜான்(56), திருவெற்றியூரைச் சேர்ந்த கார்த்திகேயன்(34) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பெருங்குளத்தூரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரும் உயிரிழந்தார்.

விமான சாகச நிகழ்ச்சியை காண வந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.