சென்னை:
மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள விவசாயம் சார்ந்த 3 சட்டங்களும் தேசவிரோதமானவை. ஆட்சியை தக்கவைக்க தமிழக விவசாயிகளை அதிமுக அரசு காவு கொடுக்கிறது என்று கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
இந்திய விவசாயிகள், விவசாயம், உணவு பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் மத்திய அரசு ,அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம்,\வேளாண் உற்பத்தி பொருட்கள் வணிக ஊக்குவிப்பு சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றை கொண்டு வந்துள்ளது.இந்தச் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி அனைத்து மாநிலங்களில் உள்ள விவசாய சங்கங்களைக் கொண்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் செப்டம்பர் 25 அன்று மறியல் மற்றும் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்றன.சென்னை தாம்பரத்தில் விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளருமான கே.பாலகிருஷ்ணன் தலைமையில் மறியல், சட்டநகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.அப்போது செய்தியாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:
விவசாயத்தை ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்க்கிற வகையில் மோடி அரசு கொண்டுவந்துள்ள 3 சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். இந்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் ஜனநாயகபூர்வமாக விவாதிக்காமல், விதிமுறைகளை மீறி, எதேச்சதிகாரமான முறையில், விதிகளை மதிக்காமல், திருத்தங்களை முன்மொழிய விடாமல், வாக்கெடுப்பு நடத்தாமல் நிறைவேற்றியுள்ளனர். இந்த சட்டங்கள் முழுக்க முழுக்க தேசவிரோதமானவை.தன்னை விவசாயி என்று கூறிக் கொள்ளும் முதலமைச்சர் வேளாண் சட்டம் நல்லது என்கிறார். அவர் வீட்டில் உள்ள யாராவது இந்த சட்டத்தை ஆதரிப்பார்களா? இந்தச் சட்டங்களின்படி, கார்ப்பரேட் கம்பெனிகள் வரைமுறையின்றி வேளாண், மளிகை பொருட்களை கொள்முதல் செய்து இருப்பு வைத்துக் கொள்ளலாம். இந்தியாவில் பற்றாக்குறை இருந்தாலும், லாபம் கிடைக்கும் என்றாலும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய வழிவகை செய்கிறது. செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி, முதலாளிகள் நிர்ணயிக்கும் விலைக்கு மக்கள் வாங்க வேண்டி வரும்.
இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் எதிரானது. பாஜக அமைச்சரவையில் இருந்து ஒரு அமைச்சரே ராஜினாமா செய்துள்ளார். ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்பதற்காக மனசாட்சிக்கு விரோதமாக பேசி வருகின்றனர். தமிழக விவசாயிகளை அதிமுக அரசு காவு கொடுக்கிறது. சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்தப்போராட்டத்தில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர்.வேல்முருகன், வே.ராஜசேகரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தென்சென்னை புறநகர் மாவட்டச் செயலாளர் சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
***************
கலாச்சார ஆய்வுக்குழுவில் பிராமண சங்கத் தலைவருக்கு என்ன வேலை?
இந்திய பண்பாட்டின் தோற்றம் மற்றும் பரிமாணத்தை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு அமைத்துள்ள நிபுணர் குழுவில் தமிழர்கள், தென்னிந்தியர்கள், வடகிழக்கு இந்தியர்கள், சிறுபான்மையினர், பட்டியலின மற்றும் பெண் பிரதிநிதிகள் இடம் பெறவில்லை. நாடாளுமன்றத்தில் நிபுணர் குழு அமைத்ததாக அறிவிப்பு வந்தவுடன், உடனடியாக இந்த குழுவை கலைக்க வற்புறுத்த வேண்டும் என்று முதன்முதலில் முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் கடிதம் எழுதியது. அதன்பிறகே முதலமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில், தமிழக பிரதிநிதிகளை சேர்த்தால் போதும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அது சரியல்ல. அந்த குழுவையே கலைக்க வேண்டும். அந்த குழுவில் அகில உலக பிராமண சங்கத் தலைவருக்கு என்ன வேலை? வட இந்தியர்களுக்கு மட்டும் இடம் கொடுத்திருப்பது ஏன்? தென்னிந்தியாவிலிருந்து ஒருவரை கூட நியமிக்காதது ஏன்? வேத நாகரீகத்தை மட்டுமே ஆய்வு செய்ய குழு அமைத்துள்ளனர். தமிழ் நாகரீகம், தென்னிந்திய நாகரீகம் போன்றவை அதில் இடம்பெறாது. எனவே, அந்த குழுவையே கலைக்க வேண்டும்.
-கே.பாலகிருஷ்ணன் பேட்டியிலிருந்து...