tamilnadu

விவசாய விரோத சட்டத்துக்கு அதிமுக ஆதரவு.... முதல்வர் மன்னிப்பு கோர மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை:
மத்திய பாஜக அரசின் விவசாயிகள் விரோதச் சட்டங்களுக்கு வக்காலத்து வாங்கியதற்காக, தன்னையும், தனது அமைச்சர்களையும் பாதுகாத்துக் கொள்ளவே இப்பாதகத்தைச் செய்தேன் என முதல்வர் பழனிசாமி ஒப்புதல் வாக்குமூலம் அளித்து, விவசாயப் பெருமக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும், என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:

“விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களுக்கும், விருப் பத்துடன் முன்வந்து ஆதரவு அளித்து விட்டு - அதனால் பாதிப்பு ஏதுமில்லை என்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், மத்திய பாஜக. அரசுக்கும், களிப்பு பொங்க வக்காலத்து வாங்கி” ஒரு மாநிலத்தின் முதல் வரே அறிக்கை வெளியிட்டிருப்பது, அவரால் மக்களுக்கு உருவான பல்வேறு மோசமான நிகழ்வுகளில், மிகவும் மோசமானதாகும்.பாஜகவின் விவசாயிகள் விரோத மசோதாக்களை, பஞ்சாப் மாநிலம் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு மாநிலங்களும், பாஜக.,வின் கூட்டணிக் கட்சிகள் மட்டுமின்றி - வேறு அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. 13 கட்சிகள் அந்த மசோதாக்களை எதிர்க்கின்றன; அதிமுக. உள்ளிட்ட 4 கட்சிகள் மட்டும் ஆதரிக்கின்றன.இவ்வாறான நிலையில் முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளதற்குப் பதிலாக, “நான் பாஜக கூட்டணியில் இருக்கிறேன். முதல்வர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இன்னும் ஆறு மாதங்களுக்கு - நானும், எனது அமைச்சரவை சகாக்களும், ஏற்கனவே செய்த - இப்போதும் செய்து கொண்டிருக்கின்ற - இனியும் செய்வதற்குத் திட்டமிட்டுள்ள - ஊழல் களில் இருந்து தப்பிக்க, பாஜகவின் பாதுகாப்பு தேவை. அதனால் ஆதரித்தேன்; மன்னித்து விடுங்கள்” என்று தமிழக விவசாயப் பெருமக்களிடம், தண்டனிட்டு, கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டிருக்கலாம்.

முதலமைச்சரின் 6 பக்க “ஆதரவு அறிக்கையை” நிராகரிக்கும் வகையில் - இன்றைக்கு மூத்த அரசியல் தலைவரும், அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினருமான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் இந்த வேளாண் சட்டங் களைக் கடுமையாக எதிர்த்துப் பேசியுள்ளார். “மக்களவையில் ஆதரவு” “மாநிலங்களவையில் எதிர்ப்பு” என்ற அதிமுகவின் நகைச்சுவைக்குப் பிறகு - இப்போது முதல்வரின் முன்பு இருப்பது ஒரேயொரு வழி.‘என்னையும், எனது அமைச் சர்களையும் பாதுகாத்துக் கொள்ள உங்களைப் பலிபீடத்தில் ஏற்ற முயற்சி செய்து பார்த்தேன்” என்று, “ஒப்புதல் வாக்குமூலம்” அளித்து - விவசாயப் பெருமக்களிடம் உடனடியாக மன்னிப்பு கேளுங்கள்! அதுதான் நீங்கள் வகிக்கும் பதவிக்கு 
அழகு! தற்காலிகப் பாதுகாப்புக் கவசம்”.இவ்வாறு ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

கி .வீரமணி கண்டனம்
விவசாயிகளை கார்ப்பரேட்டுகளிடம் கொத்தடிமை ஆக்க மத்திய பாஜக அரசு கொண்டுவந்திருக்கும் சட்டத்திற்கு தாளம் போடும் தமிழக அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது என்று திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி வெளியிட்டிருக்கும் அறிக் கையில் தெரிவித்திருக்கிறார்.