சென்னை:
அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தி,வேலைவாய்ப்பு பெறுவதை பறித்து தமிழக இளைஞர்களுக்கு துரோகமிழைத்த அதிமுக அரசைக் கண்டித்து மார்ச் 1,2 ஆகிய நாட்களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பிரச்சார இயக்கம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ் குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஓய்வு பெறக்கூடிய அரசு ஊழியர்கள் வயதை 60 ஆக உயர்த்தி அறிவித்துள்ளார். சட்டமன்ற ஜனநாயகத்திற்கு உட்பட்டு எந்தவொரு விவாதத்தையும் நடத்தாமல் மோசமான ஒரு அறிவிப்பை மேற்கொண்டு இளைஞர்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை அண்ணா திமுக அரசாங்கம் நிகழ்த்தியிருக்கிறது. கடந்த வாரத்தில் தொழில் கொள்கையை வெளியிட்ட முதலமைச்சர் அவர்கள் 20 லட்சம் வேலைவாய்ப்புகளை அடுத்த நான்காண்டுகளில் உருவாக்குவோம் என்று அறிவித்தார். ஆனால், ஒரு வாரத்தில் தற்போது அதிகாரப்பூர்வமாக இளைஞர்களின் வேலை வாய்ப்பை முற்றிலும் பறிக்கும்அறிவிப்பை வெளியிட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது.
ஏற்கனவே அரசணை 52-ஐ வெளியிட்டு அரசுப் பணியிடங்களை இல்லாமல் ஆக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. மேலும் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப மறுத்துவருகிறது. இத்தகைய சூழலில் பணி ஓய்வுக்கான வயதை அதிகரிப்பது இளைஞர்களின் எதிர்காலத்தை மேலும் மேலும் நெருக்கடிமிகுந்ததாக மாற்றும். கொரோனா பேரிடரை காரணம் சொல்லி அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 59 ஆக உயர்த்திய தமிழக அரசு. தற்போது 60 வயதாக உயர்த்தி இருக்கிறது. ஓராண்டு காலத்தில் இரண்டு முறை ஓய்வு பெறும் வயதை உயர்த்தியிருப்பது தமிழக இளைஞர்களுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகச் செயலாகும்.
எனவே இளைஞர் விரோதச் செயலை கைவிட்டு ஏற்கனவே இருக்கக்கூடிய முறையில் ஓய்வுபெறும் வயதை 58 ஆக மாற்ற வேண்டுமென தமிழக அரசை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்துகிறது.தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் துரோகம் இழைத்த அதிமுக அரசாங்கத்தை கண்டித்து. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மார்ச் 1,2 தேதிகளில் பிரச்சார இயக்கம் நடைபெறவுள்ளது. தமிழக இளைஞர்களின் நலனை காப்பதற்காக நடைபெறும் இயக்கத்தில் அனைத்துப் பகுதி இளைஞர்களையும் அணிதிரட்டி வலுவான முறையில் நடத்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
***************
மார்ச் 3-ல் ஆசிரியர்கள் போராட்டம்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 59 லிருந்து 60 ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஏற்க முடியாத ஒன்றாகும். இளைஞர்களின் வேலைவாய்ப்பை முற்றிலுமாகப் பறித்துள்ள இந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெறக்கோரி மாநிலம் முழுவதும் மார்ச் 3 ஆம் தேதி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.தமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஏற்கனவே 4.5 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 லிருந்து 59 ஆக உயர்த்தியபோதே பொதுநலன் கருதி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அதைக் கடுமையாக எதிர்த்தன.தமிழகத்தில் படித்துவிட்டு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு வேலைக்காகக் காத்திருக்கும் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களின் வயிற்றில் அடிக்கும் செயலாகும். தமிழ்நாடு அரசின் தேவையற்ற இந்த அறிவிப்பை பெரும்பாலான அரசு ஊழியர்களும்,ஆசிரியர்களும் விரும்பவில்லை. மேலும், பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.