tamilnadu

img

துபாயில் சிக்கித் தவித்த இளைஞர்கள் சிபிஎம் முயற்சியால் மீட்பு!

துபாயில் சிக்கித் தவித்த இளைஞர்கள் சிபிஎம் முயற்சியால் மீட்பு!

கள்ளக்குறிச்சி, ஜன.7- வேலை தேடி துபாய் சென்று அங்கு உணவின்றி தவித்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 9 இளைஞர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தொடர் முயற்சியால் பாதுகாப்பாக தாயகம் திரும்பினர். ஏமாற்றிய ஏஜென்டிடமிருந்து அவர்களுக்குரிய பணமும் பெற்றுத் தரப்பட்டது.  பின்னணி உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புகைப்பட்டி மற்றும் எல்லை கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார், செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 9 இளைஞர்களை, எலவனாசூர் கோட்டையைச் சேர்ந்த ஆனந்த் என்ற ஏஜென்ட் மாதச் சம்பளம் ரூ. 36,000 தருவதாகக் கூறி கடந்த நவம்பர் மாதம் துபாய்க்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால், அங்கு அவர்களுக்கு வேலை வழங்கா மல், பாஸ்போர்ட்டுகளும் பறிக்கப்பட்டன. சுமார் 20 நாட்களாக வேலை மற்றும் உணவின்றி அந்த இளைஞர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். கட்சியின் தலையீடு  தகவலறிந்த இளைஞர்களின் குடும்பத்தினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உதவியை நாடினர். கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி, கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதன் விளைவாக, இளைஞர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு சொந்த ஊர் திரும்பினர்.  பணம் மீட்பு ஏஜென்ட் ஆனந்திடம் தலா ரூ. 1,10,000 வழங்கப்பட்டிருந்த நிலையில், பயணச் செலவு போக மீதித் தொகையான ரூ. 70,000-ஐத் திருப்பித் தர முடிவு செய்யப்பட்டது. இதில் முதற்கட்டமாக இன்று தலா ரூ. 35,000 பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உதவி செய்த சிபிஎம் ஒன்றிய செயலாளர் வி. ரகுராமன் மற்றும் கட்சியினருக்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.