எண்ணெய் நக்கும் நீள நாக்குகளில் பிசிபிசுக்கும் குருதி!
நடைப்பயிற்சி போகும் போதாவது தலை “சும்மா” இருக்கிறதா! வெனிசுலா.... வெண்கலக்கடையில் புகுந்து கடைக்காரனை தூக்கிச்செல்கிறது நேரலையில் யானை... எண்ணெய் நக்கும் நீள நாக்குகளில் பிசுபிசுக்கும் குருதி. பிணமாய்க் கிடக்கிறது இறையாண்மை! சிவப்பாகிறது அருகில் இருக்கும் நீலக்கடல்! சில முதுகெலும்புகள் பேசுகின்றன... நடுநிலைகள் பட்டும்படாமல் நக்குகின்றன! “இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு” என்று ஏன் வகுப்பெடுத்தான் வள்ளுவன்! வல்லது அரசு சரி! வல்லது எல்லாம் நல்லதா? வல்லரசு மெல்லரசு நல்லரசு எவை என்று வரைபடத்தில் தேடுகிறேன்! எல்லைக் கோடுகளில் எரியும் தீப்பந்தங்கள்! செய்தி தொலைக்காட்சிகளில் “கோட்-சூட்” போட்டவர்கள் குரைக்கிறார்கள்! இப்படியாகப் பிறந்திருக்கிறது புத்தாண்டு!