சென்னை, மே 28 - மருத்துவர் சைமன் உடல் அடக்கத்தை எதிர்த்ததால் கைது செய்யப்பட்ட 8 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப் பட்டுள்ளது. சென்னை கீழ்பாக்கத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கொரோனா பாதித்து கடந்த மாதம் உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களில் சிலர் போராட்டத்தில் ஈடு பட்டனர். அந்த மருத்துவரின் உடலை சுமந்து வந்த ஆம்புலன்சு மீதும், அதில் இருந்த மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் மீதும் கல்வீச்சு நடந்தது. இதில் அவர்கள் காயமடைந்தனர். இதன்பின்பு அந்த பகுதியில் இருந்து மருத்துவரின் உடலை வேறிடத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய் யப்பட்டது. இந்த தாக்குதலில் தொடர்புடையவர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டனர். 90 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட செனாய் நகரை சேர்ந்த செந்தில் உள்பட 8 பேர் ஜாமீன் கேட்டு சென்னை எழும்பூர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதனையடுதது, 8 பேருக்கும் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.