சென்னை, ஜூலை 10- அரசுக்கு எதிராக அவதூறு பரப்பியதாக தொடரப் பட்ட வழக்கில் சித்த மருத்துவர் திருத்தணிகாச்ச லத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடித்ததாக கூறிய சித்த மருத்துவர் திருத்தணிகாச்சலம், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையால் கடந்த மே மாதம் 5ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் மேலும் இரண்டு வழக்குகளில் கைது செய்து செய்யப்பட்டு பின்னர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். அவரது முதல் வழக்கில், எழும்பூர் தலைமை குற்றவியல் நடுவர் ரோஸ்லின்துரை வெள்ளியன்று (ஜூலை 10) நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தர விட்டுள்ளார். இது ஒரு பொய் வழக்கு என்றும் உரிய நேரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்றும் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.பாலு வாதத்தை முன் வைத்தார். இதையடுத்து, ஜாமீன் வழங்கிய குற்றவியல் நடுவர், சென்னையை விட்டுச் செல்லக்கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளார். இவருக்கு ஜாமீன் கிடைத்தாலும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர் வெளி யில் வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.