tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

76 வயது மூதாட்டிக்கு சிக்கலான  பெருநாடி அறுவை சிகிச்சை

சென்னை, ஜன.7 சென்னை வேளச்சேரியில் உள்ள பிரசாந்த் மருத்துவமனை மருத்துவர்கள், 76 வயது மூதாட்டிக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ‘ஏறுமுக பெருநாடி வீக்க’  பாதிப்பை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக குணப்படுத்தியுள்ளனர்.  இதயத்திலிருந்து இரத்தம் கொண்டு செல்லும் முக்கியக் குழாயான பெருநாடி மற்றும் அதன் வளைவுப் பகுதி விரிவடைந்திருந்தது. சிகிச்சையளிக்கத் தவறினால் இரத்தக்குழாய் வெடிப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருந்தது. நோயாளியின் முதுமை, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பலவீனமான திசுக்கள் காரணமாக சுமார் 10 மணி நேரம் இந்தச் சிக்கலான அறுவை சிகிச்சை நடைபெற்றது.  பாதிக்கப்பட்ட பகுதிக்கு பதில் ‘இன்டர்கார்ட் கிராஃப்ட்’ செயற்கைக் குழாய் பொருத்தப்பட்டது. மூளை ரத்த ஓட்டத்தைக் கண்காணிக்க ‘என்ஐஆர்எஸ்’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.அறுவை சிகிச்சைக்குப் பின் நோயாளி 5 நாட்களில் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார். மருத்துவர் கௌஷிக் கண்ணன் தலைமையிலான குழுவினர், முன்கூட்டியே கண்டறிதலும் துல்லியமான திட்டமிடலுமே இத்தகைய சவாலான சிகிச்சையின் வெற்றிக்குக் காரணம் எனத் தெரிவித்தனர்.

அட்டைக்கு மாற்ற இயலாது

சென்னை, ஜன. 7- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டை மற்றும் சிங்கார சென்னை அட்டைகள் மெட்ரோ பயணம் மற்றும் வாகனம் நிறுத்தம் கட்டணங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.  தொலைந்துபோன மெட்ரோ ரயில் பயண அட்டைகள் மற்றும் சிங்கார சென்னை அட்டைகளில் மீதமுள்ள தொகையை எந்த சூழ்நிலையிலும் வேறு அட்டைக்கு மாற்றவோ அல்லது திரும்பப் பெறவோ முடியாது. இதனால் பயணிகள் தங்கள் அட்டைகளைப் பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தொழில்நுட்ப ரீதியாக, தொலைந்துபோன சிங்கார சென்னை அட்டையின் இருப்புத் தொகையை ஆர்பிஐ, என்பிசிஐ வழிகாட்டுதல்கள் மற்றும் வழங்குநர் கொள்கைகளின்படி திரும்பப் பெற முடியாது என நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ:  நுழைவு வாயில்கள் அதிகரிப்பு

சென்னை, ஜன.7- சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பீக் ஹவர் நெரிசலைக் குறைக்க, தானியங்கி கட்டண வசூல்  நுழைவு வாயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க  மெட்ரோ நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக தியாகராய கல்லூரி மற்றும் சைதாப்பேட்டை நிலையங்களில் கூடுதல் கேட்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அண்ணா நகர் கிழக்கு மற்றும் ஷெனாய் நகர் நிலையங்களிலும் விரைவில் இவை நிறுவப்படவுள்ளன. பெரும்பாலான புதிய வாயில் இருவழித்தட வசதி கொண்டவை என்பதால், காலையில் வெளியேறுபவர்கள் அதிகமாக இருக்கும்போதும், மாலையில் உள்ளே நுழைபவர்கள் அதிகமாக இருக்கும்போதும் தேவைக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டு கூட்டத்தை விரைவாகக் கையாள உதவுகின்றன. இத்துடன் பயண நேரம் நீட்டிப்பிற்கான கூடுதல் கட்டணத்தைச் செலுத்த கேட் அருகிலேயே சிறப்பு கவுண்டர்களும் அமைக்கப்பட்டுள்ளதால், பயணிகளின் காத்திருப்பு நேரம் குறைந்து பயணம் எளிதாகியுள்ளது.

இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

சென்னை, ஜன.7-  சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக, மந்தைவெளிப்பாக்கம் ராமகிருஷ்ணா மடம் சாலையில் பிரதான குடிநீர் குழாய்களை இணைக்கும் பணி நடைபெற உள்ளது.  இதன் காரணமாக, தேனாம்பேட்டை (மண்டலம்-9) மற்றும் அடையாறு (மண்டலம்-13) ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட சில இடங்களில் வியாழனன்று (ஜன.8) காலை 10 மணி முதல் ஜனவரி 9 காலை 10 மணி வரை 24 மணி நேரத்திற்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாகத் தேவையான குடிநீரைச் சேமித்து வைத்துக்கொள்ளுமாறும், அவசரத் தேவைகளுக்கு வாரியத்தின் இணையதளம் வாயிலாக லாரி குடிநீரைப் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பணத்தைத் திருப்பிக் கேட்டவர்  மீது கொடூரத்தாக்குதல்

வேலூர், ஜன.7- பள்ளிகொண்டா அருகே தொழில் தொடங்க உதவி செய்வதாகக் கூறி நண்பர் அப்துல் ரகுமானிடம் ரூ.45 லட்சமும், மற்றவர்களிடம் சேர்த்து மொத்தம் ரூ.2.75 கோடியும் பெற்று காதர் பாஷா என்பவர் மோசடி செய்துள்ளார். பணத்தைத் திருப்பித் தருவதாகக் கூறி அப்துல் ரகுமானைக் காரில் கடத்திச் சென்ற காதர் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகள், அவரைச் சரமாரியாகத் தாக்கி ஓடும் காரிலிருந்து கீழே தள்ளிவிட்டுத் தப்பிச் சென்றனர். காயமடைந்த அப்துல் ரகுமான் அளித்த புகாரின் பேரில், வேலூர் பள்ளிகொண்டா போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம்: 4.13 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு

காஞ்சிபுரம், ஜன.7- காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 696 நியாயவிலைக் கடைகள் மூலம் 4,13,182 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு வழங்கும் பணி  இன்று (ஜன.8) தொடங்குகிறது.  தமிழக அரசின் அறிவிப்புப்படி ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு மற்றும் ரூ.3,000 ரொக்கம் ஆகியவை வழங்கப்பட உள்ளன. கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, தெரு வாரியாகப் பிரிக்கப்பட்டு டோக்கன்கள் ஏற்கெனவே விநியோகிக்கப்பட்டுள்ளன.  பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் வந்து பொருட்களைப் பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கேட்டுக்கொண்டுள்ளார்.