சென்னை, ஏப். 6-தமிழ்நாட்டில் வருகிற 18 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி உள்ளவர்களின் எண்ணிக்கை 6 கோடியை நெருங்கியுள்ளது.தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 5 கோடியே 99 லட்சத்து 35 ஆயிரத்து 870 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 2 கோடியே 95 லட்சத்து 94 ஆயிரத்து 923. பெண் வாக்காளர்கள் 3 கோடியே 2 லட்சத்து 69 ஆயிரத்து 45 பேர்.ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் சுமார் 5 லட்சம் பேர் அதிகமாக உள்ளனர். தமிழகம் முழுவதும் ஓட்டு போட தகுதி பெற்ற திருநங்கைகள் 5 ஆயிரத்து 790 பேர் உள்ளனர்.தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் மொத்தம் 845 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 779 பேர் ஆண்கள், 65 பேர் பெண்கள். ஒருவர் திருநங்கை.பொதுமக்கள் வாக்களிக்க தமிழகம் முழுவதும் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்களில் 3 லட்சத்து 94 ஆயிரத்து 534 பேர் மாற்றுத் திறனாளிகள் என்பதால் அவர்களுக்கு ஏற்ப வாக்குச்சாவடிகளில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.தமிழகம் முழுவதும் தேர்தல் பணிகளில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 533 பேர் ஈடுபட உள்ளனர். பாதுகாப்புக்காக துணை நிலை ராணுவம் உள்பட போலீசாரின் சிறப்பு படை போன்றவை 200 கம்பெனி அளவுக்கு பணிகளில் ஈடுபடும்.ஓட்டுச்சாவடிகளில் 1 லட்சத்து 67 ஆயிரத்து 932 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும். எந்திர கோளாறு ஏற்பட்டால் அதை சமாளிப்பதற்காக 4,950 மின்னணு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.