tamilnadu

img

தில்லி வன்முறை தேர்தல் தோல்வியை வெறுப்பின் வெற்றியாக்குவதற்கான முயற்சி- பிருந்தா காரத்

ஷிவ் விகாரின் ஒரு மூலை. பயங்கரக் காட்சிகள் நிறைந்த திரைப்படத்தில் காணப்படுவது போல் பேரழிவுகள் நடைபெற்ற பகுதி. இங்கேதான் பாஜக சிறுபான்மைப் பிரிவு தலைவர் அஷ்ரப் என்பவரின் வீடு இருக்கிறது. முன்பு இது மிகவும் முக்கியமான ஒரு கட்டடமாக இருந்திருக்க வேண்டும். இன்று, தீப் பிழம்புகளால் வெந்து தணிந்து கருகிய ஒன்றாக இருக்கிறது. அதன் சன்னல் கதவுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. வீடு காலியாக இருக்கிறது. அவரை என்னால் சந்திக்க முடியவில்லை. சூறையாடும் கலகக் கும்பல்கள் வெறித்தனத்துடன் வந்துகொண்டிருப்பதை அறிந்து அங்கிருந்த குடியிருப்புவாசிகளுடன் பயந்து கொண்டு அவரும் ஓடிவிட்டார் என்று எனக்கு சொல்லப்பட்டது. அவர் பாஜகவில் இருந்தபோதிலும், அவரால் தன் சொத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை. அதுமட்டுமல்ல, தன்னால் தனக்குப் போலீசாரின் உதவியையும் பெற முடியவில்லை. அவர் பல தடவை  போலீசாரை உதவிக்காக அழைத்தாராம். ஆனால் அவருக்கு, “நீங்கள் ஒரு பாஜக தலைவராக இருக்க லாம், ஆனால் இப்போது உங்கள் உயிரை நீங்களாகத்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்,” என்று சொல்லப்பட்டிருக்கிறது. தீ வைத்தவர்களின் ரத்தத்தில் எரிந்துகொண்டிருந்த வெறுப்பு உணர்வு, தன்னுடைய கட்சியைச் சேர்ந்த சிறுபான்மைப்பிரிவையும் அதன் தலைவர்களையும் விட்டுவைக்க வேண்டும் என்று கருதிடவில்லை. இங்கே இருந்த இரு மசூதிகள் குறிப்பாக, குறிவைக்கப்பட்டன. உண்மையில் பல மசூதிகள் நாசமாகியுள்ள அதே சமயத்தில், இரு தரப்பினரும் வாழ்ந்துவந்த பகுதிகளில் உள்ள கோவில்கள் பாதுகாப்பாக இருக்கின்றன. எந்தக் கடவுளின் பெயரால் வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்றதோ அவரையே கேலி செய்யும் விதத்தில் இது ஓர் அடையாளமாக இருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின்போது பாஜகவின் உயர்மட்ட தலைவர்களால் விதைக்கப்பட்ட வெறுப்பு விதைகள் இப்போது விஷக் கனிகளை விளைவித்திருக்கின்றன. நாடு இரண்டாகப் பிளவுபட்டதற்குப்பின்னர் தில்லியில் வடகிழக்குப் பகுதி மிகவும் மோசமான விதத்தில் இந்து-முஸ்லீம் வன்முறை வெறியாட்டங்களால் சூழ்ந்துள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டம்-தேசியக் குடியுரிமைப் பதிவேடு-தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிரான இயக்கத்தை அழிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் அக் கிளர்ச்சிப் போராட்டங்கள் நடை பெறும் இடங்களைக் குறிவைத்து, நாசப்படுத்த இருக்கிறார்கள் என்பது தேர்தல் பிரச்சாரத்தின்போதே தெளி வாகத் தெரிந்தது. ஆனாலும், பாஜக தலைவர் கபில்மிஸ்ரா வின் வெறித்தனமான தூண்டுதல் பேச்சைத் தொடர்ந்து, இப்பகுதிகளில் மிகவும் தொடர்ச்சியாகத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்ட விதத்தைப் பார்க்கும்போது, இந்த வன்முறை வெறியாட்டங்கள் ஏதோ தன்னெழுச்சியாக எழுந்தவையல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது. ஒருவிதத்தில், தங்களுக்கு வாக்களிக்காத தில்லிவாழ் மக்கள் பழிக்குப்பழி வாங்கப்பட்டிருக்கிறார்கள். இதில் மிகவும் ஆபத்தான அம்சம் என்னவெனில், தங்களுடைய தேர்தல் தோல்வியை, தங்களுடைய வெறுப்பு மற்றும் மதவெறி சித்தாந்தத்தை வெற்றிபெறச் செய்வதற்காக இவர்கள் மேற்கொண்டுள்ள உத்தியாகும். சங் பரிவார த்தால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை வெறியாட்டங்கள் சுமார் ஒரு வார காலத்திற்கு நீடித்தது என்பதிலும், மிகவும் மூர்க்கமாக இருந்தது என்பதிலும் சந்தேகம் இல்லை. இந்த வன்முறை வெறியாட்டங்களின்விளைவாக 46 பேர் கொல்லப்பட்டுள்ளனர், நூற்றுக்கும் மேலானவர்கள் காயங்கள் அடைந்திருக்கிறார்கள். இந்துத்துவா மதவெறியர்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் கிளர்ச்சிப் போராட்டங்கள் நடைபெறும் சாலைகளை விடுவிக்கப்போகிறோம் என்ற  பெயரில், வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்து விட்ட முதல் கட்டத்தின்போது, இதற்கு எதிராக பதிலடி கொடுத்துள்ளனர். இரு தரப்பினருக்கிடையேயும் மோதல்கள் நடைபெற்றுள்ளன. தலைவர்களின் வெறுப்பை உமிழ்ந்த பேச்சுக்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட கலகக் கும்பல்கள் சிறுபான்மை யினர் அதிகம் வசித்த பகுதிகளுக்குச் சென்று வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டனர். சில பகுதிகளில் பள்ளிகள், கடைகள், வீடுகள் உட்பட இந்துக்களுக்குச் சொந்தமான சொத்துக்களும் தாக்கப்பட்டு, எரிக்கப்பட்டன. இறந்தவர்களின் பட்டியலைப்பார்க்கும்போது அவர்களில் பல இந்துக்களும் இருக்கிறார்கள். ஒரு ரிக்சா இழுப்பவர், சமூக ஊழியர் ஒருவரின் மகன் தன்னுடைய படிப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ள, பொதுப் பணித் தேர்வு எழுதி முடிவுக்காக ஆவலோடு காத்திருந்த மாணவன் ஒருவன், உளவு ஸ்தாபனத்தில் பணிபுரியும் இளம் அதிகாரி ஒருவர், ஒரு போலீஸ் கான்ஸ்ட பிள் – என பாதிக்கப்பட்டவர்களில் சிலர் இருக்கிறார்கள். காயம் அடைந்தவர்களிலும் இந்துக்கள் உண்டு.
யார் பொறுப்பு?
நாங்கள் கலவரம் நடந்த ஒவ்வொரு பகுதிக்கும் சென்று பார்த்தபோது, பெரும்பான்மை சமூகத்தில் பாதிப்புக்கு உள்ளான ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், அவர்களுக்குப் பக்கத்தில் குடியிருந்தவர்களும் கிட்டத்தட்ட ஒரேவிதமாக எங்களிடம் கூறிய வார்த்தைகள்: “நாங்கள் எல்லாம் எப்போதுமே ‘தாயாய், பிள்ளையாய்’ சமூக நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வந்திருக்கிறோம். … இது எப்படி நடந்திருக்க முடியும்?” என்பதுதான். வன்முறை வெறியாட்டத்தில் கொல்லப்பட்ட ரிக்சா இழுப்பவரின் மனைவியான சுனிதா, மூன்று நாட்களாகத் தன் கணவரை இங்கேயும் அங்கேயுமாகத் தேடி இருக்கிறார். அவர் கூறியதாவது: “அவர் இதுவரையிலும் எந்தப் பிரச்சனையையும் சந்தித்தது இல்லை. தன்னுடைய ரிக்சாவில் இந்துக்களையும் ஏற்றி வந்திருக்கிறார், முஸ்லீம்களையும் ஏற்றி வந்திருக்கிறார். அவர் ஒரு கடினமான உழைப்பாளி. அவரை வாடகைக்கு அமர்த்துபவர்களிடம் அவர் எப்போதுமே வித்தியாசம் பார்த்ததில்லை.” இவ்வாறு அவர் அழுதுகொண்டே தன் துயரத்தைக் கூறிக்கொண்டிருந்தபோது அவருடைய மூன்று சின்னஞ்சிறு பெண்குழந்தைகளையும் கட்டி அணைத்துக் கொண்டே இருந்தார். தற்போது அவர் எட்டு மாதக் கர்ப்பிணித் தாயுமாவார். இவர்களைக் காப்பாற்று வதற்கான எந்த வருவாயும் அவருக்குக் கிடையாது.
எல்லையின்றி...
வடகிழக்குத் தில்லியில் நடைபெற்றுள்ள வன்முறை வெறியாட்டங்கள் மிகவும் மோசமான அளவிலான சூறையாடல்களையும், தீ வைப்புச் சம்பவங்களையும் கண்டது. இருட்டில் வாழும் சக்திகளுக்கு, பிளவுவாத சக்திகளுக்கு, எதுவாக இருந்தாலும் இடித்துத்தரை மட்டமாக்க நினைக்கும் சக்திகளுக்கு இந்துக்களின் உயிரிழப்புகளும் கூட  பக்கத்துணை நாசம்தான். வன்முறை வெறியாட்டங்களைத் தூண்டியதற்குப் பொறுப்பேற்க வேண்டிய நபர்கள், பாதிப்புக்கு உள்ளான குடும்பங்களின் துயர்நிலையைப் பயன்படுத்திக் கொள்வதன்மூலம் மதரீதியிலான பிளவினை மேலும் அதிகப்படுத்திட முனைகிறார்கள்.    தில்லியின் இதர பகுதிகளில் இதே பிளவுவாத சக்திகளால் நடத்தப்பட்ட பேரணிகளில், இந்த வன்முறை வெறியாட்டங்களில் கொல்லப்பட்ட இந்துக்கள் சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் கொல்லப் பட்டதற்காகப் “பழிக்குப்பழி வாங்குவோம்” என்று முழக்க மிட்டு சென்றிருக்கின்றனர்.   இவற்றிலிருந்து, ஆர்எஸ்எஸ்/ பாஜக வகையறாக்களுக்கு அரசமைப்புச்சட்ட விழு மியங்கள், ஜனநாயகம், மனித நாகரிகம் ஆகியவற்றின் மீது ஏவப்படும் முரட்டுத்தனமான தாக்குதல்களுக்கு எல்லையே இல்லாமல் போய்க்கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. வன்முறை வெறியாட்டங்களைக் கட்டுப்படுத்து வதற்குப் பதிலாக, பல இடங்களில் காவல்துறையினரும் சேர்ந்தே வன்முறை வெறியாட்டங்களில் மிகவும் மோசமான முறையில் ஈடுபட்டிருக்கிறார்கள். சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக கண்மூடித்தனமான தாக்கு தலைத் தொடுத்திருக்கிறார்கள்.  சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவிக்கொண்டிருக்கும் ஒரு வீடியோ காட்சி யில் சீருடை அணிந்த ஐந்துபேரைக் கடுமையாகத்தாக்கு வதையும், அவர்களிடம் தேசிய கீதத்தைப் பாடச் சொல்வ தையும் “பாரத் மாதா கீ ஜே” என்று கூறச் சொல்வதையும் பார்ப்பதிலிருந்து தெரிந்துகொள்ள முடியும்.                                                                                                 மதவெறி ஊடுருவலின் மோசமான எடுத்துக்காட்டு
இந்தத் தாக்குதலில் காயம் அடைந்த ஃபைசான் என்பவர் பின்னர் இறந்துவிட்டார். ஃபைசான் மூன்று  வயதாக இருக்கும்போதே அவரது தந்தை இறந்துவிட்டார். அவரது விதவைத் தாயார், கிஸ்மாடூன், ஒரு பின்ன லாடைத் தொழிற்சாலைக்காக வீட்டிலிருந்தே ஆடைகள் தைத்து, ஜீவனம் நடத்தி தன் குழந்தைகளை வளர்த்து  வந்தார். இப்போது முதுமை அடைந்துள்ள அவருக்கு, ஃபைசான்தான் ஒரே ஆதரவாக இருந்தார். காயம் அடைந்திருந்த ஃபைசானை காவல்துறையினர் வீட்டிலிருந்து காவல் நிலையத்திற்கு இழுத்துச்சென்று லாக்கப்பில் அடைத்து வைத்திருந்தார்கள் என்று அவரது தாயார் நம்மிடம் கூறினார். அவர் நிலை மிகவும் மோசமான பின்னர்தான் அவரைக் காவல்துறையினர் விடுவித்திருக்கிறார்கள்.  “அவனுக்கு மட்டும் சிகிச்சை செய்வதற்குப் போலீசார் அனுமதி அளித்திருந்தார்களானால், அவன் பிழைத்திருப்பான்” என்று அவரது தாயார் கதறுகிறார். தில்லிக் காவல்துறையின் சில பிரிவுகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு மதவெறிமயமாக்கப் பட்டிருக்கிறது. சென்றவாரம் நடந்த வன்முறை வெறியாட்டங்களின்போது இது அப்பட்டமாக வெளிப்பட்டது. மதவெறிமயம் என்பது தேர்தல் வெற்றிகள் மற்றும் தோல்விகளையெல்லாம் கடந்து ஊடுருவும் என்பதற்கு சரியான எடுத்துக்காட்டாக இது விளங்குகிறது.      தாங்கள் நடத்திடும் வன்முறை வெறியாட்டங்கள் எதற்கும் தங்களுக்குத் தண்டனை கிடைக்காது என்கிற தைரியம் நிரம்பவே காவல்துறையினரிடம் காணப்பட்டது. காவல்துறையினர் மேற்கொள்ளும் அட்டூழியங்களும், அவர்கள் சிறுபான்மையினருக்கு எதிராக கற்களை எறிவதும் சமூக ஊடகங்களில் காணொளிக் காட்சிகளாக வலம் வந்தபோதிலும், எந்த நடவடிக்கையும் அவர்களுக்கு எதிராக எடுக்கப்படவில்லை. குண்டர் கும்பல்கள், தடிக்கம்புகளுடனும், கற்களுடனும், கைத்துப்பாக்கிகளுடனும் வீதிகளில் வலம் வந்து, குடியிருப்போரைத் தாக்குகின்றனர், வீதிகளில் நின்றுகொண்டிருந்த வாகனங்களை தீ வைத்துக் கொளுத்துகின்றனர்.
கொல்லுங்கள் என்பது குற்றமாகாதாம்...
முன்னதாக, கலவரத்தைத் தூண்டும் விதத்தில் வெறுப்பைக் கக்கிய பாஜக தலைவர்களான அனுராக் தாகூர் மற்றும் பர்வேஷ் மிஸ்ரா ஆகியோருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்திட வேண்டும் என்று காவல்துறையினருக்குக் கட்டளையிட வேண்டும் என்று நான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தபோது, நீதிமன்றத்தில் இது தொடர்பாகக் காவல்துறையினர், “சுட்டுக் கொல்லுங்கள்” (“Goli maaro…ko”) என்று கோஷம் இடுவது கைது செய்தற்குரிய குற்றம் அல்ல என்றும், ஒரு சமூகத்தினரை “வன்புணர்வாளர்கள்” (“Rapists”) என்று கூறுவதும் ஒரு குற்றமாகாது என்று வாதிட்டனர். இவ்வாறு பேசியது எல்லாம் வன்முறையைத் தூண்டியதாகாது என்றால், இதற்கெல்லாம் வேறு என்ன அர்த்தம்? இத்தகைய சூழ்நிலையில், சட்டத்தின் ஆட்சியை உயர்த்திப்பிடித்திட, நீதித்துறைக்கு ஒரு தனிப் பொறுப்பு இருக்கிறது. இதுபோன்ற கோரிக்கைகளுடன் மனுக்கள் உச்சநீதிமன்றத்திலும், தில்லி உயர்நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டன. பின்னர், தில்லி உயர்நீதிமன்றத்தில் பின்னிரவு ஒன்றில் நீதியரசர் எஸ். முரளிதர், முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்ய மறுத்த தில்லிக் காவல்துறையினரைக் கடுமையாகச் சாடி குறிப்புகள் எழுதியதைத் தொடர்ந்து, அவர் மற்றொரு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். அவர் மாற்றப்பட்டபின்னர் தில்லி போலீசுக்கு நீதிமன்றங்கள் பரிவுடன் காட்டும் ஈடுபாடு, மிகவும் விரிவான அளவில் விமர்சனங்களைக் கொண்டு வந்திருக்கின்றன. இதேபோன்று நாட்டின் இதர பகுதிகளிலும் கோஷங்கள் எழுப்பத் துவங்கியிருக்கின்றனர். மேற்கு வங்கத்திற்கு அமித் ஷா சென்றிருந்தபோது, பாஜக ஆதரவாளர்கள் இதே கோஷத்தை கொல்கத்தாவின் வீதிகளில் முழங்கி இருக்கின்றனர்.
அரசின் தோல்வியா? வெறியாட்டத்துக்கு ஆதரவா?
வன்முறை வெறியாட்டங்கள் நடந்தது குறித்து மூன்று நாட்கள் வரையிலும் நாட்டின் பிரதமர் வாயே திறக்கவில்லை. உள்துறை அமைச்சர் காணாமல் போய்விட்டார். இது அரசின் தோல்வியா, இல்லை, நடந்துள்ள வெறியாட்டங்களுக்கு ஆதரவா?    இவ்வாறு தில்லியில் ஒருபக்கத்தில் வன்முறை வெறியாட்டங்கள் நடந்துள்ள போதிலும், இதற்கு எதிராகவும்  ஆக்கப்பூர்வமான முறையிலும் மக்கள் அணிதிரண்டு வருவதையும் தில்லியில் பார்க்க முடிகிறது. 1984 சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங் களுக்குப் பின்னர், இடதுசாரிக் கட்சிகள், இயக்கங்கள், சமூக இயக்கங்கள், அரசு சாரா அமைப்புகள், மருத்து வர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் மிகவும் குறிப்பிடத்தக்க விதத்தில் இளைஞர்களும், இளம் பெண்களும் நாள்தோறும் வீதிகளில் இவ்வன்முறைக்கு எதிராக அணி திரண்டு வருகின்றனர். பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு ஒருமைப்பாடு தெரிவிப்பதுடன், வன்முறைக்கு ஆளான பகுதிகளில் அமைதி நிலவவும் வேலை செய்து வருகின்றனர்.
தில்லிக்குத் தேவை அமைதி
தேர்தல் சமயத்தில் செய்ததைப்போலவே, பதற்றம், மதவெறிமயம், வதந்தி ஆகியவை கிளப்பப்படும் இத்தகைய சூழலிலும் தில்லி வாழ் மக்கள் வெறுப்பு என்னும் கொரோனா வைரசிலிருந்து தங்கள் நகரத்தைப் பாதுகாத்திடுவார்கள்.  நன்றி: என்டிடிவி, மார்ச் 3, 2020  தமிழில்: ச.வீரமணி