tamilnadu

img

இளைய தலைமுறையின் நம்பிக்கையை சிதைப்பது அரசின் ஊழல் இல்லையா?

ஊழல் என்பது நேரடியாக பண மோசடிமற்றும் முறைகேடுகளில் ஈடுபடுவது மட்டுமா? நன்றாக இயங்கிக் கொண்டிருக்கும், பலருக்கு வேலைவாய்ப்பு அளித்துக் கொண்டிருக்கும் ஓர் அமைப்பை சிதைக்கும் செயலை எதில்வகைப்படுத்துவது? சுதேசிக் கொள்கையை வலியுறுத்தும்ஆர்எஸ்எஸ் அமைப்பில் பணிபுரிந்த பின்னணியுள்ள பிரதமர் மோடி, ‘மேக் இன் இந்தியா’ என்ற முழக்கத்தைச்சொன்னபோது, மத்திய மற்றும் மாநில அரசுகளின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் வளம் பெறும் என பலரும் நம்பினார்கள். ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகப் பொதுத்துறை நிறுவனங்களைக் காவுகொடுக்கும் போக்குதான் தொடர்கிறது. மூன்று உதாரணங்கள் இதில் முக்கியமானவை.


சமீபத்தில் ‘ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிடப்போகிறேன்’ என தேசத்தையே பிரதமர் மோடி ஸ்தம்பிக்க வைத்தார். அதன்பின், “செயற்கைக்கோளைச் சுட்டுவீழ்த்தும் தொழில்நுட்பத்தை இந்தியா அடைந்து விட்டது. விண்வெளியில் பறந்த ஒரு செயற்கைக்கோளை இந்திய ஏவுகணை சுட்டு வீழ்த்தியது” என்று ‘மிஷன்சக்தி’ திட்டத்தின் வெற்றியை அறிவித்தார். அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுடன் இந்தியாவையும், விண்வெளி வல்லரசுப் பட்டியலில் இணைக்கக் காரணமாக இருந்த இந்த சாதனையைப் புரிந்தது டிஆர்டிஓ என்கிற பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு.மத்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ்இயங்கும் டிஆர்டிஓ இந்தியாவில் ராணுவ ஆராய்ச்சிகளைச் செய்யும். ஆயுதங்களை உருவாக்கும் மிக முக்கியமான நிறுவனம். உலகின் மிக வேகமான ஏவுகணையாகக் கருதப்படும் பிரமோஸ் ஏவுகணையை ரஷ்யக்கூட்டு முயற்சியுடன் உருவாக்கியது இந்த நிறுவனம்தான்.


நிதிக்குறைப்பும் நிலைக்குழு கண்டனமும்


ஆனால், இந்த நிறுவனத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து குறைக்கப்படுகிறது. 2015-16 நிதியாண்டில் ரூ.14,358 கோடி தருவதாகச் சொன்ன மத்திய அரசு, அதில் சுமார் 2,000 கோடிரூபாயைப் பிறகு குறைத்துக் கொண்டது. 2016-17 நிதியாண்டில் ரூ.18,782 கோடி கேட்டது டிஆர்டிஓ. ஆனால்மத்திய அரசு கொடுத்தது ரூ.13,593 கோடி மட்டுமே! பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த 2018 ஜூலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. ‘இப்படி பட்ஜெட்டைக் குறைப்பதால் எதிர்காலத் தொழில்நுட்பத்தைப் பெறுவதற்கான பல ஆராய்ச்சிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன’ என அது குற்றம் சாட்டியது. ஆனாலும், நிலைமை மாறவில்லை. இந்த சூழலில்தான் டிஆர்டிஓ ‘மிஷன் சக்தி’ திட்டத்தை சாதித்துள்ளது.ராணுவ டாங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்துள்ளது டிஆர்டிஓ. ஆனால் கிட்டத்தட்ட இதே தரமுள்ள ‘ஸ்பைக்’ என்ற ஏவுகணையை இந்தியாவுக்கு விற்க சிலஆண்டுகளாகவே முயற்சி செய்து வருகிறது இஸ்ரேல். அந்த நாட்டு அரசு நிறுவனமான இஸ்ரேல் ஏரோஸ்பேஸ்இண்டஸ்ட்ரீஸின் தயாரிப்பு இது. ‘அதை வாங்க வேண்டாம். நாமே தயாரித்துக் கொள்ளலாம்’ என டிஆர்டிஓ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்தது.ஆனால், சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தைச் சேர்ந்த கல்யாணி ஸ்ட்ராடெஜிக் சிஸ்டம்ஸ் லிமிடெட் என்றகார்ப்பரேட் நிறுவனத்துடன் இணைந்து இங்கு தொழிற்சாலை உருவாக்க ஒப்பந்தம் போட்டிருக்கிறது இஸ்ரேல். எனவே டிஆர்டிஓ அமைப்பைப் புறக்கணித்துவிட்டு இந்த இஸ்ரேல் - கார்ப்பரேட் கூட்டணிக்கு ஒப்பந்தம்போகக்கூடும்.


 ரபேல் விவகாரத்தில் புறக்கணிக்கப்பட்ட இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (ஹெச்ஏஎல்) பற்றிநிறையவே பேசப்பட்டுவிட்டது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 126 ரபேல் விமானங்கள் வாங்க பேச்சுவார்த்தைநடந்தபோது, அவற்றில் 108 விமானங்களை ஹெச் ஏஎல்தயாரிக்கும் என விதி இருந்தது. மோடி ஆட்சியில் 36 விமானங்கள் மட்டுமே வாங்குவதாக ஒப்பந்தம் போட்டபோது அது மாறிவிட்டது. ரபேல் விமானத்தைத் தயாரிக்கும்பிரான்ஸின் டஸோ ஏவியேஷனுக்கு இந்தியக் கூட்டு நிறுவனமாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ்நிறுவனம் ஆக்கப்பட்டது.


எச்ஏஎல் மீது சர்ஜிகல் ஸ்ட்ரைக்


இந்த ஒப்பந்தம் உருவானபோது பிரான்ஸ் மக்களுக்குமேலும் ஏமாற்றம். அப்போது பிரான்ஸ் அதிபர் ஃபிராங்கோய்ஸ் ஹாலந்தே சொன்ன ஒரு விஷயம் முக்கியமானது “முந்தைய விதிகளின்படி 126 விமானங்களை விற்றாலும், அதில் பெரும்பாலான வேலைவாய்ப்பு இந்தியாவுக்கே கிடைத்திருக்கும். இப்போது நாம் விற்பது 36 விமானங்கள் தான் என்றாலும், பிரான்ஸ் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும்” என்றார்அவர். ‘மேக் இன் இந்தியா’ முழக்கத்தின் மீது இதைவிட அதிகமாக யாராலும் கரிபூசி இருக்க முடியாது.மத்திய அரசின் நிறுவனமான ஹெச்ஏஎல் இந்தரபேல் ஒப்பந்தத்தை இழந்தது. ரஷ்யாவுடன் இணைந்துஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் தயாரிக்கும் வாய்ப்பையும் மத்திய அரசு இதற்குத் தர மறுத்துவிட்டது. இப்படி இரண்டு பெரிய ஆர்டர்கள் ரத்தானதால், ஹெச்ஏஎல் நிறுவனத்தின் விமானத் தயாரிப்புப் பிரிவு முடங்கிப் போயிருக்கிறது. ஹெலிகாப்டர் பிரிவில் மட்டும் சில பணிகள் நடக்கின்றன.மிக், ஜாகுவார், ஹாக், சுகோய் என இந்திய விமானப்படைக்கு வெளிநாடுகளில் வாங்கப்படும் விமானங்களை உருவாக்குவது, பராமரிப்பது, புதுப்பிப்பது போன்றபணிகளை ஹெச்ஏஎல் மட்டுமே இதுவரை செய்து வந்தது. சமீபத்தில் பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை அழிக்கச் சென்ற இந்திய விமானப்படை விமானங்கள்அனைத்தும் ஹெச்ஏஎல் பராமரித்துக் கொடுத்த செல்லக்குழந்தைகள்தான். ஆனால் ஹெச்ஏஎல் நிறுவனத்தின் மீதும் சர்ஜிகல் ஸ்ட்ரைக் நிகழ்த்தி வருகிறது மத்திய அரசு.


இந்த ஜனவரி மாதம் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம்கொடுக்க ஹெச்ஏஎல் நிறுவனத்திடம் நிதி இல்லை. ஆயிரம் கோடி ரூபாயைக் கடன் வாங்கி, ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்தது ஹெச்ஏஎல் நிர்வாகம்.இந்த நிறுவனம் ஒன்றும் நஷ்டத்தில் இயங்கவில்லை. இந்திய ராணுவத்துக்கும், விமானப்படைக்கும் ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் சப்ளை செய்ததற்கு நிறைய பணம் வர வேண்டும். அவை பணம் தர மறுக்கின்றன. காரணம், மத்திய அரசு நிதிஒதுக்கவில்லை என்பதுதான். இன்னொரு பக்கம், ஹெல்ஏஎல் நிறுவனத்தின் பங்குகளை விற்றும், லாபத்தில்டிவிடென்ட் கேட்டும் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 11,500 கோடி ரூபாயைப் பெற்றிருக்கிறது மத்திய அரசு.‘இப்படி எல்லா வழிகளிலும் கிடுக்கிப்பிடி போட்டு ஹெச்ஏஎல் நிறுவனத்தை முடக்குவதால் யாருக்கு லாபம்’என்பதைக் கண்டுபிடிக்க ராக்கெட் சயின்ஸ் படித்திருக்கவேண்டிய அவசியமில்லை.


அரசின் ஆர்வமின்மையும்  டிராயின் அலட்சியமும்


“பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு நேர்ந்த கதி இன்னொருதுயரம். தங்கள் 1.7 லட்சம் ஊழியர்களுக்கு சம்பளம் தருவதற்கு அந்த நிறுவனத்திடம் நிதி இல்லை. மூன்று வார தாமதத்துக்குப் பிறகு சம்பளம் வழங்கப்பட்டது. ஒரு காலத்தில் தனிக்காட்டு ராஜாவாக கோலோச்சிக் கொண்டிருந்த நிறுவனம் இது. 2014ஆம் ஆண்டு பிஜேபி ஆட்சிக்கு வந்தபோது ரூ.8,000 கோடி நஷ்டத்தில் இயங்கியதுபிஎஸ்என்எல். கார்ப்பரேட் செல்போன் நிறுவனங்களுடன் போட்டி போட இதனால் முடியவில்லை. 2016ஆம்ஆண்டு அப்போதைய மத்திய தொலைத் தொடர்புத்துறைஅமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “இன்னும் நான்கு ஆண்டுகளில் பிஎஸ்என்எல் லாபத்தில் இயங்கும்” என்றார். ஆனால் நஷ்டம்தான் அதிகமானது. 4ஜி வசதி இல்லாதபிஎஸ்என்எல் செல்போன் சேவையை பெற பலரும் தயாராக இல்லை. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தால் இந்தியாவில் கடன் வாங்கி களைத்துப் போய் ஜப்பான்வரை சென்று கடன் வாங்க முடிகிறது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை விஷயத்தில் மத்திய அரசும் ஆர்வம் காட்டவில்லை. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் அலட்சியம் காட்டுகிறது.இதுபோன்ற பொதுத்துறை நிறுவனங்கள்தான் இந்தியாவின் நம்பிக்கைகள், “மேக் இந் இந்தியா” திட்டத்தின்ஆணிவேர்கள். பல லட்சம் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வலிமையுள்ள அமைப்புகள். இவற்றைசிதைப்பது, பலரின் நம்பிக்கையை சிதைக்கும் செயல். இவற்றின் வீழ்ச்சியில் உருவாக்கப்படும் கார்ப்பரேட் அமைப்புகள் என்ன மாதிரி வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன? எப்படிப்பட்ட நம்பிக்கையை நம் இளைய தலைமுறைக்கு ஏற்படுத்துகின்றன?


“காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் என்ற நவீன கொத்தடிமை முறையை மோடி அரசு உருவாக்குகிறது” என கொதித்து எழுந்து கடந்த செப்டம்பரில் போராட்ட அறிவிப்பு செய்தது கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் அல்ல; ஆளும் பாரதிய ஜனதா கட்சியைப் பின்னிருந்து இயக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தொழிற்சங்கமான பாரதிய மஸ்தூர் சங்கம்.ஜவுளித் தொழிலில் மட்டும் இருந்த ஒப்பந்தத் தொழிலாளர் முறை அனைத்துத் துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படுவதாக கடந்த 2018 பட்ஜெட் உரையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார். இதைத்தொடர்ந்து தொழில் நிறுவனச் சட்டம் திருத்தப்பட்டது.


கானல் நீராகும் வேலை


“இதனால் தொழில் துறையில் நிரந்தர வேலை என்பது கானல் நீராகிவிட்டது. தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி, அரசின் பொதுத்துறை நிறுவனங்களும் நிரந்தரஊழியர்களை வேலைக்கு எடுப்பதை நிறுத்திவிட்டு காண்ட்ராக்ட் ஊழியர்களையே நியமனம் செய்கின்றன. தற்போது எல்லா நியமனங்களிலும் 67 சதவிகிதம் ஒப்பந்தஊழியர்கள்தான். இன்னும் சில ஆண்டுகளில் எல்லா நிறுவனங்களிலும் ஒப்பந்த ஊழியர்களே இருப்பார்கள்.ஒப்பந்தத் தொழிலாளர்களை நிறுவனங்கள் கசக்கிப்பிழிகின்றன. சித்ரவதைக்கு ஆளாக்குகின்றன. நிரந்தரஊழியர்களுக்குத் தருவதில் பாதிக்கும் குறைவாகவே சம்பளம் தருகிறார்கள். விடுமுறை, மருத்துவ வசதி, கிராஜூவிட்டி போன்ற எதுவுமே கிடையாது. நிறுவனம் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, ஓர் ஊழியரை வேலையை விட்டுத் துரத்தலாம். பலரும் துரத்தப்படுகிறார்கள். பலர் வேலையை விட்டுவிட்டும் ஓடுகிறார்கள். இந்தியாவை உலுக்கும்வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு இதுதான் காரணம். ஐரோப்பிய நாடுகளில் இதுபோன்ற சட்டங்கள் வேலையில்லா திண்டாட்டத்தையே அதிகரித்துள்ளன” என்கிறார் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் தலைவர் சஜி நாராயணன்.அரசு வேலைகளையும் பாதுகாப்பற்றவையாக மாற்றி, கார்ப்பரேட் வேலைகளையும் காண்ட்ராக்ட் முறைக்குமாற்றி, ஒட்டுமொத்தமாக இளைய தலைமுறையின் நம்பிக்கையை சிதைப்பதைவிட பெரிய ஊழல் ஏதாவதுஇருக்கிறதா?


ஆனந்த விகடன் கட்டுரையின் சில பகுதிகள்