tamilnadu

img

கொரோனா வைரஸைத் தடுக்குமா நிகோடின்? பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் தகவல்

பாரீஸ்:
நிகோடினால் கொரோனா வைரசைத் தடுக்க முடியுமா என்று பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். பாரீஸ் மருத்துவமனை ஒன்றின் ஆராய்ச்சியாளர்கள் 343 கொரோனா வைரஸ் நோயாளிகளையும், லேசான அறிகுறிகளுடன் நோயால் பாதிக்கப்பட்ட139 பேர்களையும் பரிசோதித்த பின்னர் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

பிரான்சில் புகைபிடிக்கும் பழக்கமுள்ள 35 சதவிகிதத்தினருடன் ஒப்பிடும்போது வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் புகைபிடிப்பவர்கள் குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர் என்கிறார் என்று ஆய்வின் இணை ஆசிரியரும் உள் மருத்துவப் பேராசிரியருமான ஜாஹிர் அமோரா. மேலும் அவர் கூறுகையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளுக்கு நிகோடின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறதா என்பதைப் பரிசோதிக்கவும் தீவிர சிகிச்சை நோயாளிகளுக்கும் நிகோடினை பயன்படுத்த ஒப்புதல் கேட்டு விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்டிருந்த இதேபோன்ற கண்டுபிடிப்புகளை இந்த ஆராய்ச்சி எதிரொலித்துள்ளது. சீனாவில் பாதிக்கப்பட்ட 1,000 பேரில் 12.6 சதவீதம் பேர் புகைப்பிடிப்பவர்கள் என்று பரிந்துரைத்தது. உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, சீன மக்களில் வழக்கமாக புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையை விட இது மிகக் குறைவு.

நிகோடின் செல் ஏற்பிகள், வைரஸ் உயிரணுக்களுக்குள் நுழைவதையும் உடலில் பரவுவதையும் தடுக்கிறது என்று பிரான்சின் பாஸ்டர் இன்ஸ்டிடியூட்டின் புகழ்பெற்ற நரம்பியலாளர் ஜீன்-பியர் சேஞ்சக்ஸ் கூறுகிறார். மேலும் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள ஆராய்ச்சியாளர்கள் பிரான்ஸ் சுகாதார அதிகாரிகளின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறார்கள். பாரிஸில் உள்ள பிட்டி-சால்பெட்ரியர் மருத்துவமனையில் சுகாதார ஊழியர்கள் மீது நிகோடின் திட்டுகளைப் பயன்படுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். ஏனெனில் அங்குதான் ஆரம்ப ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

அதே நேரத்தில், பிரான்சில் புகைப்பழக்கத்தால் ஆண்டுக்கு 75,000 பேர் உயிரிழக்கின்றனர். ஐரோப்பாவில் கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பிரான்சும் ஒன்று. இங்கு 21,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1,55,000 க்கும் அதிகமானோர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-லைவ்மின்ட் இணையதளத்திலிருந்து....