tamilnadu

img

‘அப்பா பைத்தியம்’ ஆசி கிடைத்தாலும் மக்கள் ஆசி கிடைக்காது...!

புதுச்சேரி மக்களவைத்தொகுதிக்கு ஏப்ரல்18 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. திமுக மற்றும் இடதுசாரிக்கட்சிகளின் ஆதரவுடன் இந்த தொகுதியை அகில இந்திய

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியிடமிருந்து கைப்பற்றும் முனைப்பில் உள்ளது காங்கிரஸ். சந்தர்ப்பவாதத்திற்கு பெயர்போன என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனரும் முன்னாள் முதலமைச்சருமான என்.ரங்கசாமி தற்போது பாஜக-அதிமுக கூட்டணியில் இளைய பங்காளியாக சேர்ந்துள்ளார். புதுச்சேரி மக்களவைத்தொகுதி மட்டுமல்ல; தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலும் இந்த சிறிய மாநிலத்தில் மிகவும்முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். தட்டாஞ்சாவடி தொகுதியை பொறுத்தவரை முன்னாள் முதலமைச்சரும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான என்.ரங்கசாமிக்கு செல்வாக்கு மிகுந்த தொகுதியாக கருதப்படுகிறது. அந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது கட்சியை சேர்ந்த அசோக் ஆனந்த் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். அதனால் அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிபோனதால் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. புதுச்சேரி மக்களவைத்தொகுதியை பொறுத்தவரை கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியே அதிகமுறை வெற்றிபெற்றுள்

ளது. கடந்த மக்களவைத் தேர்தலின் போதுதற்போதைய முதலமைச்சர் வி.நாராயணசாமி என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.ராதா கிருஷ்ணனிடம் 60 ஆயிரத்து 854 வாக்கு

கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதனால் இந்த தேர்தல் அவருக்கும் ரங்கசாமிக்கும் இடையே கவுரவப்போட்டியாக இருக்கும் என்று சில ஊடகங்கள் கருதினாலும் மதச்சார்பற்ற அணிக்கும் மதவாத அணிக்கும் இடையிலான யுத்தமாகவே அது இருக்கும் என்பது தான் உண்மை. 2014 மக்களவைத்தேர்தலில் தோல்வியடைந்தாலும் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் வி.நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ்- திமுக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. 


இந்த தேர்தலில் ரங்கசாமியின் வியூகத்தை முறியடிக்க காங்கிரஸ் பல திட்டங்களை யோசித்து வருகிறது. தட்டாஞ்சாவடி தொகுதி மக்களிடம் செல்வாக்கு பெற்ற காங்கிரஸ் மாநிலத்தலைவரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான ஏ.நமச்சிவாயத்தை மக்களவைத் தேர்தலில் நிறுத்தலாமா என்பதும் அதில் ஒரு யோசனையாகும். மோடி தலைமையிலான பாஜக அரசின் மோசமான செயல்பாடுகளால் அந்த அரசுக்கு எதிராக புதுச்சேரி மக்களிடம் கடும்அதிருப்தி நிலவுகிறது. எனவே திட்டமிட்டு தீவிரமாக பிரச்சாரம் செய்தால் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் எளிதாக வெற்றிபெற்றுவிடமுடியும். எனவே தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினரை பதவி விலகச் செய்து அந்த தொகுதிக்கும் இடைத்தேர்தலை சந்திக்கவேண்டிய நிலைமையை ஏற்படுத்துவதை விட இளமையுடன் துடிப்பு மிக்க நபர் ஒருவரை வேட்பாளராக தேர்வு செய்வதே பொருத்தமாக இருக்கும் என்று முதலமைச்சர் நாராயணசாமியின் நாடாளுமன்ற செயலர் கே.லட்சுமிநாராயணன் கூறுகிறார். இன்னும் ஓரிரு நாட்களில் எங்களது வேட்பாளரை முடிவுசெய்து விடுவோம் என்றும் அவர் கூறினார். புதுச்சேரி மக்களவைத்தேர்தல் முடிவுகள் வேறு ஒரு வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கப்போகிறது. அம் மாநில துணைநிலை ஆளுநராக உள்ள கிரண்பேடி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். மத்தியில் உள்ள பாஜக அரசின் ஆசியுடன் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு முட்டுக்கட்டைபோடுவது அவரது வாடிக்கையாக உள்ளது.


கூட்டாட்சித் தத்துவத்தை சீர்குலைத்துவரும் அவரது நடவடிக்கைக்கு கடிவாளம் இடும் வகையில் தேர்தல் முடிவுஇருக்கவேண்டும் என்கிறார் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு புதுச்சேரி மாநிலத்திற்கான மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய்தத். இலவச அரிசி திட்டம், புதுச்சேரிக்கு முழுமாநில அந்தஸ்து ஆகியவற்றுக்கு எதிரான போக்கை கொண்டுள்ள ஆளுநரை மக்களிடம் அம்பலப் படுத்துவதோடு அதிக அரசியல் அதிகாரம், நிதிஒதுக்கீடு செய்வதில் தன்னாட்சி அதிகாரம் ஆகிய கோரிக்கைகள் பிரச்சாரத்தின்போது வலியுறுத்தப்படும் என்று லட்சுமி நாராயணன் கூறினார். தனியார் மருத்துவக்கல்லூரிகளை நடத்தும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கேசவன் மகனும் மருத்துவருமான கே.நாராயணசாமியை இம்முறை புதுச்சேரி மக்களவைத்தொகுதியில் களம் இறக்க ரங்கசாமி முதலில் முடிவு செய்திருந்தார். ஆனால் நல்ல நேரம், ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை கொண்ட ரங்கசாமி தற்போது டாக்டர் நாராயண சாமியை மக்களவைக்குபதில் தட்டாஞ்சாவடியில் நிறுத்தலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். இதற்காக அவர் வழக்கம்போல் அழுக்குசாமியை குருவாக ஏற்றுக்கொண்டுள்ள ‘அப்பா பைத்தியம்’ சாமிகளிடம் யோசனை கேட்க சேலம் சூரமங்கலம் செல்லவும் திட்டமிட்டுள்ளார். இவர் எந்தசாமியின் ஆசியை பெற்றாலும் இந்ததேர்தலில் மக்களின் ஆசியை பெறமுடியாது என்பதுதான் புதுச்சேரியில் இருந்து வரும் தகவல் ஆகும்.