கேரளா பத்தினம்திட்டா நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் கே.சுரேந்திரனின் மீதான குற்ற வழக்குகள் செய்தித்தாள் ஒன்றின் 4 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிப்படி குற்ற வழக்குகளில் உள்ள வேட்பாளர்கள் தங்களின் மீதான வழக்கு விசாரணை குறித்ததான தகவலை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் முன்னணி 3 செய்தித்தாள்கள் அல்லது ஒரு முன்னணி செய்தித்தாளில் மூன்று முறை தேர்தலுக்கு முன்பாக கட்டாயம் வெளியிட வேண்டும். இந்நிலையில் கேரளாவின் பத்தினம்திட்டா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் கே.சுரேந்திரன் மீதான வழக்குகள் வியாழக்கிழமையன்று ஜன்மபூமி செய்தித்தாளின் 4 பக்கங்களில் வெளியிடப்பட்டிருந்தது.
மேலும், அதில் இது ஒரு பொருளுக்கான (அ) அரசு ஏலம் (அ) சேவைக்கான விளம்பரம் அல்ல; இது பத்தினம்திட்டா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் கே.சுரேந்திரன் மீதான வழக்குகள் என வெளியானது. சுமார் 240 குற்ற வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ள நிலையில் அவற்றில் பெரும்பாலான வழக்குகள் சபரிமலை விவகாரத்தில் பதிவானவை. கிட்டத்தட்ட கேரளாவின் அனைத்து மாவட்டங்களிலும் அவர் மீது வழக்குகள் உள்ளன.