பிரதமர் மோடியின் வாழ்க்கை பற்றிய இணையதள நிகழ்ச்சித் தொடருக்கு இன்று தேர்தல் ஆணையம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்தாண்டின் நாடாளுமன்ற தேர்தல் துவங்கி 2 கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளன. இன்னும் 5 கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெறவுள்ளன. தேர்தல் நன்னடத்தை விதிகள் காரணமாக ஏற்கனவே வெளியாக இருந்த மோடி வாழ்க்கை வரலாற்று படத்திற்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்தது. இந்நிலையில் இன்று ’மோடி - ஒரு குடிமகனின் வாழ்க்கை பயணம்’ என்ற தலைப்பில் வெளியாகி வந்த பிரதமர் மோடியின் வாழ்க்கை பற்றிய இணையதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.
இன்று இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் உள்ள நிலையில் ஒரு தனிநபர் தொடர்பான வாழ்க்கை வரலாறு பற்றிய படம் அரசியல் லாபம் ஈட்ட அல்லது தேர்தல் சமயத்தில் உள்ள சூழ்நிலையை பாதிக்க வழிவகுக்கும். எனவே, இதுபோன்ற சினிமா படம் அல்லது தொடர்களை மின்னணு ஊடகங்களில் ஒளிபரப்ப தடைவிதிப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த அனுமதி அறிக்கை வரும் வரை இந்த தடை உத்தரவு செயல்பாட்டில் இருக்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.