இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ,முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 17 மீனவர்கள் IND-TN-10-MM-206 மற்றும் IND-TN-10-MM-543 ஆகிய பதிவெண்கள் கொண்ட இரண்டு இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் இன்று (24.12.2024) சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அக்கடிதத்தில், 20.12.2024 அன்று இலங்கையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத ஆறு நபர்களால், நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரை கிராமத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த இருவேறு சம்பவங்களையும் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ள முதலமைச்சர், இதுபோன்று அடிக்கடி நடக்கும் கைது மற்றும் தாக்குதல் சம்பவங்கள், பாரம்பரிய கடற்பரப்பில் மீன்பிடிக்கும் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் மீனவர்களின் வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மையையும், ஆபத்தையும் ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2024 ஆம் ஆண்டில் மட்டும் 530 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 71 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அண்மைக்காலமாக நடைபெற்று வரும் இத்தகைய சம்பவங்களும், தாக்குதல்களும் மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பி வாழும் மீனவ மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், எதிர்காலத்தில் தமிழக மீனவர்கள் மீது இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்கவும் உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம், முதல்வர் தனது கடிதத்தின் வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளார்.