அரியலூர்:
இராமேஸ்வரத்தில் நடைபெற்ற செயற்கைக்கோள் ஏவும் திட்டத்தில் பங்கேற்ற ஆண்டிமடம் மாணவி மோனிஷாவிற்கு ஜெயங்கொண்டம் பாத்திமா பள்ளியின் பள்ளி தாளாளர் ரோச் அலெக்சாண்டர் தலைமையில் பள்ளி முதல்வர் உர்சலா சமந்தா முன்னிலையில் பாராட்டு விழா நடைபெற்றது.
மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை சார்பில் நூறு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும்திட்டம் கடந்த 7-ம் தேதி இராமேஸ் வரத்தில் செயல்படுத்தப்பட்டது.செயற்கைக்கோள் ஏவும் திட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு அவர்களிடமிருந்து மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சிறந்த செயற்கைக் கோள்களை வடிவமைத்த மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.‘நல்லோர் வட்டம்’ என்ற அமைப்பு சார்பில் செயற்கைக்கோள் ஏவுதல் திட்டத்திற்கு அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள தாவடநல்லூர் என்னும் குக்கிராமத்தை சேர்ந்த வேல்முருகன்-வள்ளி தம்பதியரின் மகள் மோனிஷா தேர்வு செய்யப்பட்டார்.
திருச்சியில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை பொது நிர்வாகவியல் துறையில் படித்து வரும் மோனிஷா, அவர் படிக்கும் படிப்பிற்கும் செயற்கைக்கோள் ஏவும் திட்டத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லாத சூழ்நிலையிலும் செயற்கைக்கோள் தொடர்பான ஆய்வுகளில் அதிக ஈடுபாடு கொண்டதால் இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.செயற்கைக்கோள் தொழில்நுட்பம் தொடர்பாக அவருக்கு முறையான ஆன்லைன் பயிற்சிகள் வழங்கப்பட்டன. நேரடி செயல் விளக்க பயிற்சியும் வழங்கப்பட்டது.50 கிராமுக்கும் குறைவான எடை கொண்ட செயற்கைக்கோள், கடந்தஏழாம் தேதி ராக்கெட்டுக்கு பதிலாக பலூன் தொழில்நுட்பம் மூலம் இராமேஸ்வரத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்ட நிலையில் 35 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட்ட செயற்கைக்கோள் தொடர்ந்து எட்டு மணி நேரம் தகவல்களை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பியது. செயற்கைக்கோளில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு வர பெற்றுள்ள தரவுகளைக் கொண்டு அடுத்த கட்ட ஆய்வு பணிகளை மேற்கொள்ள இருப்பதாக மாணவி தெரிவித்தார்.
செயற்கைக்கோள் தொழில் நுட்பத்தில் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்த, போதிய அறிவியல் படிப்பை மேற்கொள்ளாத மாணவி, செயற்கைக் கோள் ஏவி வெற்றி பெற்றது மாவட்டத்து
க்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. இதையடுத்து மாணவியை அரியலூர் மாவட்ட சமூக செயல்பாட்டாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மாணவியின் வீட்டுக்கு சென்று பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
நூறு சேட்டிலைட் விண்ணில் ஏவப்பட்ட இந்த திட்டத்திற்கு இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு, ஆசிய அளவிலானசாதனைப் புத்தகம், உலக அளவிலானசாதனை புத்தகம், கின்னஸ் சாதனை புத்தகம் ஆகியவற்றில் இடம் பெற தேர்வுசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. இந்த பாராட்டு விழாவில் ஆசிரியர்கள் மாணவர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.