tamilnadu

img

அந்நிய நேரடி முதலீட்டு கொள்கையை குறித்து மத்திய அரசு ஆய்வு

கடந்த 2018-2019 நிதியாண்டில், இந்தியாவிற்கு வரும் அந்நிய நேரடி முதலீடுகள் சரிந்துள்ளதால் அந்நிய நேரடி முதலீட்டு கொள்கையை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது.

இந்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் செய்யும் அந்நிய நேரடி முதலீடுகள் கடந்த 2018-2019 நிதியாண்டில் 1 சதவீதம் (3100 கோடி ரூபாய்) சரிந்து 3 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு, மருந்தியல் உள்ளிட்ட  துறைகளில் அந்நிய நேரடி முதலீடு அதிகளவில் சரிந்துள்ளது. கடந்த நிதியாண்டில் தொலைத்தொடர்பு துறையில் வெளிநாட்டு முதலீடு 57 சதவீதம் குறைந்து 1 லட்சத்து 88 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. அதேபோல், மருந்தியல் துறையில் அந்நிய முதலீடு 74 சதவீதம் சரிந்து 1859 கோடி ரூபாயாக உள்ளது. இதை தொடர்ந்து, மின் துறையில், அந்நிய முதலீடு 32 சதவீதம் சரிந்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து இந்தியாவில் செய்யும் முதலீடுகள் மூலமாகக் கிடைக்கும் வருமானத்திற்கு கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல், வரி விதிக்கப்பட்டதே இந்த சரிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அந்நிய நேரடி முதலீட்டு கொள்கையை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது.

இதுவரை இந்தியாவில் அதிக முதலீடுகளைச் செய்யும் நாடாக மொரீஷியஸ் இருந்தது. ஆனால் இந்த முறை மொரீஷியஸை பின்னுக்குத் தள்ளி சிங்கப்பூர் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2017-18 நிதியாண்டுடன் ஒப்பிடும் போது 2018-19 நிதியாண்டில் இந்தியாவில் மொரீஷியஸ் நாட்டு நிறுவனங்கள் செய்யும் முதலீடுகள் 2 சதவீதம் சரிந்துள்ளது. அதே சமயம், சிங்கப்பூர் நிறுவனங்கள் செய்யும் முதலீடுகள் 2 சதவீதம் அதிகரித்துள்ளது.