அகமதாபாத்:
மாதவிடாய்க் காலத்தில், விடுதி சமைய லறைக்குள் செல்லக் கூடாது என்று குஜராத் மாநிலம் ‘பூஜ்’ பகுதியில் உள்ள ஸ்ரீசகஜ்ஜா னந்தா என்ற தனியார் கல்லூரி விதி வைத்திருந் தது. இந்த விதியை மீறிவிட்டதாகக் கூறி, 68 மாணவி யருக்கு கட்டாய மாதவிடாய் சோதனையும் நடத்தியது.
இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், குஜராத்தைச் சேர்ந்த கிருஷ்ணாஸ்வரூப் தாஸ்ஜி என்ற சாமியார், “மாதவிடாய் நாட்களில் தங்கள் கணவர்களுக்கு உணவு சமைக்கும் மாதவிடாய்ப் பெண்கள், அடுத்த ஜென்மத்தில் நாய்களாகப் பிறப்பார்கள்; சாப்பிட்ட கணவன்மார்கள் காளை மாடாவார்கள்” என்று பயமுறுத்தினார்.இந்நிலையில், மாதவிடாய் பற்றிய பொதுவான தவறான கருத்துக்களைத் களைவதற்காக ‘சச்சி சஹேலி’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகியான டாக்டர் சுர்பி சிங் என்பவர், ‘பீரியட் பீஸ்ட்’ என்ற நிகழ்ச்சியை தில்லியில் ஏற்பாடுசெய்தார். திங்களன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 28 மாதவிடாய்ப் பெண்கள் அடங்கிய குழு 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு சமைத்து பரிமாறியது. இந்த ‘பீரியட் பீஸ்ட்’ நிகழ்வில் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் சமூக ஆர்வலர் கம்லா பாசின் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.