இலவச வீட்டுமனை பட்டா வழங்கியவர்களுக்கு நில அளவை செய்து தரக்கோரி வி.தொ.ச மனு
திருச்சிராப்பள்ளி, ஜூலை 14- திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திங்களன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் அதிகாரியிடம் மனு கொடுத்தனர். அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ராஜேஷ்கண்ணா, அதிகாரியிடம் கொடுத்த மனுவில், “திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், முத்தரசநல்லூர் வருவாய் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகின்ற 45 நபர்களுக்கு கடந்த 9.5.2025 அன்று திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார். இந்த இலவச வீட்டுமனை பட்டா மணிகண்டம் ஒன்றிய பகுதியில் உள்ள மேக்குடி மற்றும் கொரக்குடி கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கில் வழங்கப்பட்டது. அந்த இடத்தில் அவர்கள் வீடுகட்டி குடியேற தயாராக உள்ளதால், மேற்படி நபர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வீட்டுமனையினை நில அளவை செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என அவர் கூறியிருந்தார். இதே போன்று, விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் தங்கதுரை, அதிகாரிகளிடம் கொடுத்த மனுவில், திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்டத்திற்குட்பட்ட காட்டூர் பகுதியில் பர்மா காலனி மற்றும் அதை சுற்றியுள்ள தெருக்களில் குறித்த நேரத்தில் குடிநீர் குழாயில், குடிநீர் விநியோகம் செய்யாமல் மாநகராட்சி நிர்வாகம் தங்கள் விருப்பத்திற்கேற்ப குடிநீர் திறந்து விடுவதால் அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். இதனைத்தடுத்து நிறுத்தி, குறிப்பிட்ட நேரத்தில் குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறியிருந்தார். விவசாய தொழிலாளர்கள் சங்க அந்தநல்லூர் கிளைச் செயலாளர் வினோத் அதிகாரியிடம் கொடுத்த மனுவில், “திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் ஒன்றியத்தில் உள்ள பேரூர் ஊராட்சியில் தொடர்ந்து, குறைந்த அழுத்த மின்சாரம் வருவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுவதை தவிர்க்கவும், மின்சாதனங்கள் பழுதடைவதை தடுக்கவும் சீரான மின்சாரம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறியிருந்தார்.