ஆறு தளங்களில் 4.30 லட்சம் நூல்கள்
கலைஞர் அரங்கில் 5 ஆயிரத்து 400 நூல்கள், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 6 ஆயிரம் நூல்கள், குழந்தைகள் பிரிவில் 60 ஆயிரம் நூல்கள், தமிழ் நூல்கள் பிரிவில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் நூல்கள், தமிழ் நூல்கள் குறிப்புப் பகுதியில் 50 ஆயிரம் நூல்கள், 50 ஆயிரம் ஆங்கில நூல்கள், போட்டித் தேர்வுப் பிரிவில் 45 ஆயிரம் நூல்கள், அரிய நூல்கள் பிரிவில் 14 ஆயிரம் நூல்கள் என மொத்தம் 4 லட்சத்து 30 ஆயிரத்து 400 நூல்கள் இடம்பெறுகின்றன.
குழந்தைகளுக்கான தளம்
முதல்தளத்தில் உள்ள குழந்தைகள் பிரிவில் நான்கு வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்காக ஒளி, ஒலி காட்சிகள், சோட்டா பீம், டோரா புஜ்ஜி, டாம் அண்ட் ஜெர்ரி உள்ளிட்ட வண்ண பொம்மைகள், ஒவியங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும், பெற்றோருடன் வரும் குழந்தைகளுடன் நேரடியாக கலந்துரையாடல் நிகழ்ச்சியும், அரங்கில் குழந்தைகள் நடக்கும்போது, பறவைகள், பூச்சிகள் பறப்பது போன்ற செயற்கைக் கார்ட்டூன்கள் திரையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கம் முற்றிலும் குழந்தைகளை ஈர்க்கும் வகையிலும், அதே நேரம் அவர்கள் வாசிப்பு திறனை மேம்படுத்தும் விதத்திலும் அமைக்கப்பட்டிருக்கிறது.
‘ஒரு நூலகம் திறக்கப்படுகிறது என்றால் 100 சிறைச்சாலைகள் மூடப்படும்’ என்கிறார்கள் அறிஞர்கள். உலக எழுத்தாளர்கள் பலரும் தங்களுடைய வாழ் நாளில் பெரும்பகுதியை நூலகங்களில் தான் செலவிட்டார்கள். மாமேதை மார்க்ஸ் மூலதனம் எனும் நூலை எழுதுவதற்காக தன்னுடைய வாழ்க்கையின் பெரும் பகுதியை நூலகத்தில் செல விட்டுள்ளார். மாமேதை லெனின், “படி, படி படித்துக் கொண்டே இரு” என்றார். மாவீரன் பகத்சிங் ‘நான் சாகும்போது முட்டாளாக சாக விரும்ப வில்லை’ என்றார். பேரறிஞர் அண்ணா தமது வாகனப் பயணத்தில் பெரும்பகுதியை படிப்பதற்காகவே செலவிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் கலைஞரும் புத்தகம் படிப்பதில் தீராத தாகம் கொண்டவர். அவரு டைய பெயரில் தமிழின் தலைநகரம், அரசியல் தலைநகரம், தொல்லியல் நகரம், தூங்கா நகரம், கோவில் மாநகரம் என்ற ஐந்து பெருமை களைக் கொண்ட மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் இன்று (ஜூலை 15) திறக்கப்படுகிறது. இதை நூலகம் என்று சொல்வதை விட மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட மக்களுக்கு கிடைத்த அறிவுக் களஞ்சியம் என்றேகூறலாம். கலைஞர் நூற்றாண்டு நூலகம் காலை ஒன்பது மணி முதல் இரவு எட்டு மணி வரை திறந்திருக்கும். வருடத்தில் எட்டு விடுமுறை நாட்கள் தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் நூலகம் திறந்திருக்கும். சுமார் 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் அடித்தளம், தரைத்தளம், அதனு டன் ஆறு தளங்களைக் கொண்டு ரூ.120 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப் பட்டுள்ளது. அடித்தளத்தில் வாகன நிறுத்துமிடம், செய்தி-நாளிதழ் சேமிப்பு, நூல் கட்டும் பிரிவுகள் அமைந்துள்ளன.
தரைத்தளத்தில் கலைக்கூடம், மாற்றுத்திற னாளிகளுக்கான பிரிவு, மாநாட்டுக் கூடம், ஓய்வறை, சொந்த நூல்களைப் படிக்கும் பிரிவு, பல்வகை பயன்பாட்டு அரங்கம், உறுப்பினர் சேர்க்கை பிரிவு உள்ளிட்டவை அமைந்துள்ளன. முதல் தளமான கலைஞர் பகுதியில், குழந்தைகள் நூலகம், நாளிதழ்கள்- பருவ இதழ்களைப் படிக்கும் பகுதி, சொந்த நூல் களைப் படிக்கும் பிரிவு, அறிவியல் கருவிகள் பிரிவு உள்ளிட்டவை அமைந்துள்ளன. இரண்டாம் தளத்தில் தமிழ் நூல்கள் பிரிவு உள்ளது. கலைஞரின் நூல்களைக் கொண்ட பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது தளத்தில் ஆங்கில நூல்கள், ஆராய்ச்சி இதழ்கள் உள்ளன. நான்காவது தளத்தில், எதிர்காலக் கனவுகளுடன் போட்டித் தேர்வு களில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவி கள் மற்றும் இளைஞர்களின் கனவை நன வாகும் வகையில் ஏறத்தாழ 30 ஆயிரம் புத்த கங்களுடனான பகுதி அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது தளத்தில் மின்னணுத் தொழில்நுட்பத்தின் வாயிலாக இன்றைய தலைமுறைக்குத் தேவையான அறிவுச் செல்வங்கள் அனைத்தையும் தருவதற்கான பகுதி அமைக்கப்பட்டுள்ளது. ஆறாவது தளத்தில் நூல் பகுப்பாய்வு பிரிவு - அதாவது நூல் பட்டியல் தயாரித்தல் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் சார்ந்த பகுதி கள் இடம்பெற் றுள்ளன. உள்கட்டமைப்புகள் அனைவரும் வியக்கும் வண்ணம் உள்ளது.
வரலாற்று ஆய்வாளர்களுக்கான களஞ்சியம்
ஒவ்வொரு பிரிவும் அதன் பயன்பாட்டுக்கும் தேவைக்கும் உகந்த விதத்தில் வடிவமைக்கப் பட்டுள்ளன. வரலாற்று ஆய்வாளர்களுக்கான மிகப்பெரும் சான்றாதாரக் களஞ்சியமாக இந்த நூலகத்திலுள்ள அரிய நூல்கள் பிரிவு இருக்கும். எடுத்துக்காட்டாக, 1918ஆம் ஆண்டு வெளி வந்த ‘ஜஸ்டிஸ்’ ஆங்கில இதழ்களும், திராவிட இயக்கத் தலைவர்கள் வெளியிட்ட 50-க்கும் மேற்பட்ட இதழ்களும் இந்தப் பிரிவில் இடம்பெற்றுள்ளன. 1824-ஆம் ஆண்டு வெளி வந்த சதுரகராதி முதல் பதிப்பு, லண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தை அடுத்து மது ரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மட்டும் தான் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
கற்றலுக்கான மையம்
கலைஞர் நூற்றாண்டு நூலகம் குழந்தை கள், மாணவர்கள், இளைஞர்கள், ஆராய்ச்சி யாளர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகு பவர்கள், பெண்கள், மூத்த குடிமக்கள் என அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் நிகழ்ச்சிகளுக்கான அரங்கம், சிறார்களுக்கான திரையரங்கம், சிறார் அறிவியல் கூடம், பார்வை மாற்றுத்திறனாளி களுக்கான ஒலிநூல் ஸ்டுடியோ, கலைக்கூடம் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. இத னால், கலை, பண்பாடு, அறிவியல், தொழில் நுட்பம் சார்ந்த கற்றலுக்கான மையமாகவும் இது இயங்கும்.
மின் நூலகம்
முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்நூலகத்தில் மின்னுருவாக்கப் பிரிவுகளும் உண்டு. அரிய நூல்கள், ஆவணங்கள், ஓலைச்சுவடிகள், கையெழுத்துப் பிரதிகளை மின்னுரு வாக்கம்செய்து, மின்நூலகம் உருவாக்கி உலக மெங்கும் வாழும் தமிழர்களுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான புத்தகங்கள், அனைத்துப் புத்தகங்களையும் அவர்கள் வாசிப்பதற்கு ஏதுவாக டெய்சி, எம்பி3, பிஆர்எப், ஆடியோ வடிவங்களில் (DAISY MP3, BRF, Audio format) வழங்கப்படவுள்ளது.
அறிவுக் கொண்டாட்டத்திற்கு
குழந்தைகளுக்கான கதைசொல்லல், அறிவியல் அறிதல், கலைகள், விளை யாட்டு, யோகா, கைவினைச் செய்முறைகள் போன்ற தொடர் நிகழ்வுகளையும் விடுமுறை காலச் சிறப்பு நிகழ்ச்சிகளையும் மேற்கொள்ளத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மகளிருக்கான சுய தொழில் பயிற்சி வகுப்புகள், இளைஞர்களுக் கான வேலை வாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சிகள், மாணவர்க ளுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகள், மொழி, இலக்கியம், வரலாறு, பொருளாதாரம், ஊடகம் போன்ற வெவ்வேறு துறைகளைச் சார்ந்த வல்லு நர்களுடன் தொடர் உரையாடல்கள், மாற்றுத் திறனாளிகளுக் கெனத் தனிப்பட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளது. நம்முடைய தொன்மையான நாகரீகத்தை அறிந்துகொள்ளும் வகையில் கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், பாறை ஓவியங்கள், அகழாய்வுகள் குறித்து ஆளுமைகளுடன் உரை யாடல்கள் என வாசிப்புத் தேடலை அறிவுக் கொண்டாட்டமாக மாற்றும் முயற்சிகளும் இந்நூலகத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. மதுரை மீனாட்சியம்மன்கோவில், மாரியம்மன் தெப்பக்குளம், திருப்பரங்குன்றம், அழகர்கோவில், திருமலை நாயக்கர் மகால், தொல்லியல் நகரான கீழடி என்ற பட்டியலில் இப்போது இணைந்துள்ளது கலைஞர் நூற்றாண்டு நூலகம்.
- ச.நல்லேந்திரன், ஜெ.பொன்மாறன்