தொழில்நுட்ப அறிவு மேலாண்மை படிப்பு பிஎம்சி டெக் கல்லூரி அறிமுகம்
கிருஷ்ணகிரி, அக்.16 - ஓசூர் பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரியில் 2025-2026 கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு முதுகலைக் கணினிப் பயன்பாட்டு அறிவியல் (பிசிஏ), பொறியியல் (பிஇ) முதுகலைப் பட்டம், முதுகலை வணிக மேலாண்மை (எம்பிஏ) மாணவர்களுக்கான 19வது துவக்க விழா நடைபெற்றது. கல்விக்குழுமத்தின் தலைவர் பெ.குமார், செயலாளர் பெ.மலர், அறங்காவலர் பெ.சசிரேகா முன்னிலை வகித்தனர். முதுகலை வணிக மேலாண்மை துறைத் தலைவர் முனைவர் மோகன்ராஜ் வரவேற்க, இயந்திரவியல் துறைத் தலைவர் முனைவர் ராஜசேகர் கல்லூரியின் சாதனைகள் குறித்துப் பேசினார். சிறப்பு விருந்தினரான அசோக் லைலண்ட் நிறுவன மனிதவள மேம்பாட்டு மேலாளர் ரமேஷ் பேசுகையில், மாணவர்கள் பெறும் பட்டம் வேலைக்கான தகுதியைக் குறிக்கும் ஒரு படிநிலை மட்டுமே; ஆனால் அவர்கள் தலைமைத்திறன், தொழில்நுட்ப அறிவு, மேலாண்மைத் திறன் போன்றவற்றை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். பிஎம்சி டெக் இயக்குநர் சுதாகரன், பொறியியல் கல்லூரி முதல்வர் செந்தில்குமார், முனைவர்கள் ரவிச்சந்திரன், சரவணன், கஜேந்திரன் மற்றும் கிருஷ்ணன் விழாவில் பேசினர். மக்கள் தொடர்பு அலுவலர் முனைவர் விஜயகுமார் ஒருங்கிணைத்தார். கணினிப் பயன்பாட்டு அறிவியல் துறைத் தலைவர் எம்.ஏஞ்சலின் ரோஷி நன்றி கூறினார்.
