வரலாற்று வளர்ச்சி கண்ட தமிழ்நாடு இரட்டை இலக்க ஜிடிபி; கல்வி, சுகாதாரத்தில் முதலிடம் தேசிய சராசரியை விட 3 மடங்கு உற்பத்தித் துறை வளர்ச்சி தனி நபர் வருமானம், ஏற்றுமதி 2 மடங்கு அதிகரிப்பு
சென்னை, பிப். 16 - உலகப் பொருளாதாரம், அமெரிக்காவின் பல்வேறு கட்ட வரி விதிப்பு நடவடிக்கைகளாலும், சர்வதேச வர்த்தக பதற்றங்களாலும் தத்தளித்த நிலையில், தமிழ்நாடு தனது மீள்தன்மையுடைய பொருளாதார அமைப்பின் வலிமையை நிரூபித்து, வரலாற்றுச் சிறப்பு மிக்க பொரு ளாதார வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக 2025-26 பொருளாதார ஆய்வறிக்கையில் பெருமிதம் தெரிவிக்கப் பட்டு உள்ளது. தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் துணைத் தலை வர் பேராசிரியர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன் தலைமை யிலான குழுவினர், 2025-26 நிதியாண்டின் 260 பக்கங்கள் கொண்ட பொருளாதார ஆய்வறிக்கையை திங்களன்று (பிப். 16) சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரிடம் சமர்ப்பித்தனர். துணை முதலமைச் சர் உதயநிதி ஸ்டாலின் தலைமைச் செயலாளர் முருகா னந்தம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். கடந்த ஐந்தாண்டுகளில் மாநிலம் கண்ட பொருளா தார வளர்ச்சி மற்றும் மாற்றங்களை விரிவாக விளக்கும் இந்த ஆய்வறிக்கையில் முக்கிய அம்சங்களாக கூறப் பட்டிருப்பதாவது: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் சமூக நீதியையும் பொருளாதார வளர்ச்சி யையும் இணைத்து செயல்படுத்தும் தனித்துவமான கொள்கைகளின் வெற்றியை இந்த அறிக்கை பெரு மையுடன் பறைசாற்றுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி 31.19 லட்சம் கோடி ரூபாய் 2024-25 நிதியாண்டில் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு விலையில் ரூ. 31.19 லட்சம் கோடியை தொட்டுள்ளது. இதுமாநிலத்தின் பன்முக பொருளாதார வலிமையின் உறுதியான சான்றாகும். 16 சதவிகித பெயரளவு வளர்ச்சி விகிதத்தையும், 11.2 சத விகித உண்மை வளர்ச்சி விகிதத்தையும் பெற்று, பெரிய மாநிலங்களுக்கிடையே தமிழ்நாட்டை முதன்மை இடத்தில் அமர வைத்துள்ளது. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் வெறும் 4 சதவிகிதத்தையும், மக்கள் தொகையில் 6 சதவீதத்தை யும் மட்டுமே கொண்டிருக்கும் மாநிலம், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.4 சதவிகித பங்களிப்பை வழங்கி தனது உற்பத்தித் திறனையும் பொருளாதார செயல்திறனையும் அழுத்தமாக வெளிப்படுத்தியுள்ளது. தனிநபர் வருமானம் 1.77 மடங்கு அதிகம் மாநிலத்தின் தனிநபர் வருமானம் ரூபாய் 3.62 லட்சத்தை எட்டியுள்ளது. இது தேசிய சராசரியான ரூபாய் 2.05 லட்சத்தைக் காட்டிலும் 1.77 மடங்கு அதிகம். தனி நபர் வருமானத்தில் நாடு முழுவதும் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ள தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில், 32 மாவட்டங்களின் தனிநபர் வருமானம் தேசிய சராசரி யைவிட அதிகம் என்பது, வளர்ச்சி மாநிலம் முழுவதும் சீராக பரவியுள்ளது என்பதற்கான திண்ணமான சாட்சியமாகும். உற்பத்தித் துறையில் மூன்று மடங்கு வளர்ச்சி 2024-25இல் 14.74 சதவிகித உண்மை வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ள உற்பத்தித் துறை, அகில இந்திய சராசரியான 4.5 சதவிகிதத்தைவிட மூன்று மடங்கு அதிகமாக வளர்ச்சியடைந்துள்ளது. 2021-22 முதல் 2024-25 வரையிலான நான்காண்டு காலத்தில் 9.38 சதவிகித சராசரி உற்பத்தித் துறை வளர்ச்சி விகிதத்து டன், இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கும் தமிழ்நாடு, நாட்டின் மொத்த தொழிற்சாலை பணியாளர்களில் 15 சத விகிதத்தினரை தன்னகத்தே கொண்டுள்ளது. சேவைத் துறையிலும் இரட்டை இலக்க வளர்ச்சி சேவைத் துறை 2024-25இல் 11.3 சதவிகித இரட்டை இலக்க உண்மைப் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது. மனை வணிகம், பொது மேலாண்மை, போக்குவரத்து, உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதி கள், இதர சேவைத் துறைகள் அனைத்தும் இரட்டை இலக்க வளர்ச்சியை நோக்கி பயணித்து, மொத்த மாநில உள்நாட்டு மதிப்புக் கூட்டலில் 53.6 சதவிகித பங்க ளிப்பை வழங்கியுள்ளன. அந்நிய நேரடி முதலீட்டில் தொடர் உயர்வு உலகளாவிய அரசியல் நெருக்கடிச் சூழல் காரண மாக இந்தியாவின் ஒட்டுமொத்த அந்நிய நேரடி முதலீடு குறைந்த நிலையிலும், தமிழ்நாடு இந்த இக்கட்டான சூழலை வெற்றிகரமாக எதிர்கொண்டு முன்னேறியுள்ளது. 2022-23இல் 2,169 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த மாநிலத்தின் அந்நிய நேரடி முதலீடு, 2023- 24இல் 2,436 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், 2024-25இல் 3,681 மில்லியன் அமெரிக்க டாலர் களாகவும் தொடர்ச்சியாக உயர்ந்துள்ளது. ஏற்றுமதியில் 2 மடங்கு முன்னேற்றம் 2020-21இல் 26.15 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த வணிகப் பொருள்கள் ஏற்றுமதி, 2024-25இல் ஏறத்தாழ இரு மடங்கு அதிகரித்து 52.07 பில்லியன் அமெரிக்க டாலராகியுள்ளது. மின்னணு சாதனங்கள், ஜவுளி, தோல் பொருள்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியில் முதலிடத்தையும், பொறியியல் இயந்திரங்களின் ஏற்று மதியில் இரண்டாம் இடத்தையும் வகிக்கும் தமிழ்நாடு, ‘இந்தியாவின் டெட்ராய்டு’ என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்திய வெற்றி உலக அளவில் பணவீக்கம் அதிகமாக இருந்த சூழலிலும், தமிழ்நாடு பணவீக்கத்தை திறம்படக் கட்டுப் படுத்தி குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றுள்ளது. 2023-24இல் 5.4 சதவிகிதமாக இருந்த சில்லரைப் பணவீக்கம், 2024-25இல் 4.6 சதவிகிதமாகவும், 2025-26இல் டிசம்பர் வரை 2.3 சதவிகிதமாகவும் படிப்படியாக குறைந்துள்ளது. குறிப்பாக உணவு பணவீக்கம் 2025- 26இல் கிட்டத்தட்ட பூஜ்ஜியத்தை நெருங்கியுள்ளது. வேலை உருவாக்கத்தில் கணிசமான முன்னேற்றம் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் மாநிலம் கண்கூடான முன்னேற்றத்தை எட்டியுள்ளது. 2021-22இல் 71.5 சதவிகிததமாக இருந்த தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 2023-24இல் 72.1 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதேபோல வேலையின்மை விகிதம் 5.1 சதவிகிதத்திலிருந்து 3.5 சதவிகிதமாக கணிசமாக குறைந்துள்ளது. சமூக நலத் திட்டங்களுக்கான செலவினங்களில் அதிகரிப்பு தமிழ்நாட்டின் வளர்ச்சியின் மிக முக்கியமான அம்சம், சமூக நல கொள்கைகளில் பின்வாங்காமல் பொருளாதார கட்டமைப்புகளை மேம்படுத்தியது என்ப தாகும். 2021-22இல் ரூ. 1,13,268 கோடியிலிருந்து 2025-26இல் ரூ.1,57,864 கோடியாக சமூகநலத் துறைக்கான செலவினங்கள் கணிசமாக அதிகரித்து உள்ளன. கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, கண்ணிய மான வாழ்வு ஆகியவற்றை வெறும் நலத்திட்டங்களாக அல்லாமல் சமூக உரிமைகளாக நடைமுறைப்படுத்தி யுள்ளது மாநில அரசு. கல்வி - சுகாதாரத்தில் முதலிடம் கல்வியில் தமிழ்நாடு பிரகாசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது. தேசிய நிறுவனத் தரவரிசை கட்ட மைப்பு 2025இன்படி இந்தியாவின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்களில் 17 நிறுவனங்களுடன் முதலிடம் வகிக்கிறது. உயர்கல்வி சேர்க்கை விகிதத்தில் தேசிய சராசரி 28.4 சதவிகிதமாக இருக்கும்போது, 47 சத விகிதத்துடன் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. சுகாதாரத் துறையிலும் 2023இல் சிசு இறப்பு விகிதம் 1,000 உயிருள்ள பிறப்புகளுக்கு 12 என்ற மிகக் குறைந்த அளவையும், ஆயுள் காலம் 73.4 ஆண்டு களுடன் நாட்டிலேயே மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது. வேளாண்மையிலும் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க சாதனை புரிந்துள்ளது. 2019-20இல் ரூ.2.23 லட்சம் கோடியாக இருந்த வேளாண் கடன் வழங்கல், 2023- 24இல் ரூ. 4.52 லட்சம் கோடியாக இரு மடங்குக்கும் மேலாக அதிகரித்து, ஏறத்தாழ 299 லட்சம் உழவர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களைப் போலன்றி, தமிழ்நாட்டின் வளர்ச்சி பல்வேறு நகரங்களில் சீராக பரவலாக்கப் பட்டுள்ளது. கோயம்புத்தூர், மதுரை, திருப்பூர், திருச்சி ராப்பள்ளி, சேலம் போன்ற நகரங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி, நகர - ஊரக இடைவெளி யைக் குறைத்துள்ளன. தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டமும் தற்போது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொழில் வழித்தட திட்டங்களுடன் இணைக்கப்பட்டு உள்ளது என்பது இந்தியாவிலேயே தனித்துவமான சாதனையாகும். 2030 இலக்கை நோக்கி 2030-ஆம் ஆண்டில் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை எட்டுவதற்கான இலக்கை நிர்ணயித்துள்ள தமிழ்நாடு, அதை நோக்கி உறுதியான பயணத்தில் ஈடுபட்டுள்ளது என்பதே இன்று சமர்ப்பிக்கப் பட்ட ஆய்வறிக்கையின் முடிவாகும் என்று கூறப்பட்டு உள்ளது. மேலும், சமூக நீதி என்பது வளர்ச்சிக் கான விலையல்ல, மாறாக ஆற்றல்வாய்ந்த வினையூக்கி என்பதை தமிழ்நாடு நிரூபித்துள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சமத்துவமும் செயல்திற னும் ஒன்றையொன்று வலுப்படுத்தும் தனித்துவமிக்க வளர்ச்சி முன்மாதிரியை உருவாக்கி, உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நிலையான வளர்ச்சியை எட்ட முடியும் என்பதை தமிழ்நாடு உலகிற்கு எடுத்துக் காட்டி உள்ளதாகவும் பொருளாதார ஆய்வறிக்கை சுட்டிக் காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
