tamilnadu

img

மனிதநேயம் பேசும் ‘‘மை லார்ட்” - ஜி.ராமகிருஷ்ணன்

மனிதநேயம் பேசும் ‘‘மை லார்ட்”

இயக்குநர் ராஜு முருகன் தனது ஜோக்கர் திரைப் படத்திலிருந்து சமூக அக்கறை யுள்ள விஷயங் களை தனது படைப்புகளில் வெளிப்படுத்தி வரு கிறார். அவரின் இந்த அக்கறை மை  லார்ட் திரைப்படத்திலும் வெளிப் பட்டுள்ளது. இப்படம் பிப்ரவரி 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளி யாகியுள்ளது. இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர்கள் சசி குமார், சைத்ரா, குரு சோமசுந்தரம், ஆஷா சரத் என பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ளது.  மை லார்ட் திரைப்படம் இரண்டு  விஷயங்களை பேசுகிறது. ஒன்று, அதிகாரத்தின் மேல்மட்டத்தில் ஒன்றிய அமைச்சராக இருக்கும் ஆஷா சரத் சிறுநீரகம் பாதிக்கப் பட்டு அறுவை சிகிச்சைக்காக காத்துக் கொண்டிருக்கிறார். சிறுநீரகம் கிடைக்காமல் போனால் உயிரிழக்க நேரிடும் என்பதால் அவ ருக்கான சிறுநீரகத்தை தேடுகிறது. தன்னுடைய பிள்ளைகள் தாய்க்கு சிறுநீரகம் அளிக்க தயார் இல்லாத நிலையில் அமைச்சருடைய உயிர் ஊசலாடுகிறது. இந்நிலையில் தனது அதிரடிப்படையை ஏவி விட்டு சிறுநீரக கொடையாளரை பல வந்தமாக கொண்டுவர முயற்சிக் கிறார். மறுபுறம், கோவில்பட்டியில் தீப் பெட்டி நிறுவனத்தில் பணியாற்றும் ஏழை சசிகுமாருக்கும் (முத்து சிற்பி) அவரது இணையர் சைத்ரா விற்கும் (சுசீலா) காதல் திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்கு பிறகு ஒருநாள் சைத்ரா மயங்கி விழுந்து ரத்தக் கசிவு ஏற்படுகிறது. சிகிச்சைக்கு அரசு மருத்துவ மனை சென்று அங்கிருந்து திசை திருப்பப்பட்டு தனியார் மருத்துவ மனைக்கு செல்கிறார். சிகிச்சைக்கு பணம் கட்ட முடியாமல் கடன் வலையில் சிக்கிய இவர்களிடம் கிட்னி திருடும் குடும்பம் கிட்னியை கேட்கிறது. இருவரும் மறுத்துவிடுகிறார்கள். அமைச்சருக்கு தகுதி வாய்ந்த  சிறுநீரகம் இருப்பதாக தெரிய வந்து சசிகுமாரை அமைச்சரின் கூட் டம் தேடுகிறது. இதற்காக அவரை அணுக முயற்சிக்கும்போது சசி குமாருக்கு ஏற்கெனவே இருக்கும் பிரச்சனைகள் தெரியவருகின்றன. தனது மனைவியின் வயிற்று வலிக்காக மருத்துவமனை ஏறி இறங்கிய சசிகுமார் அதற்காக கடன் வலையில் சிக்கியிருப்பதும், அதன் பிறகு அவர் சந்தித்த சிக்கல்களும் நமது நாட்டில் ஏழை மக்கள் படும் இன்னல்களை அப்பட்டமாக வெளிக்கொணரும் காட்சிகளாக அமைந்துள்ளன. கொத்தடிமைகளாக வாழும் மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை நகர்த்த கடனுக்குள் சிக்குவதும், அதற்காக தங்களது வாழ்க்கையையே அடகு வைப்ப தும் என இந்நாட்டில் தொடரும் சம்ப வங்களை சரியாக காட்சிப்படுத்தி யுள்ளார் இயக்குநர். ஒருகட்டத்தில் தனது சிறுநீரகத்தை தானமாகக் கொடுக்க சசிகுமார் ஒப்புக்கொள்ள அதன்பின் அறுவை சிகிச்சைக்கு அவர் தயார்படுத்தப்படுகிறார். இந்நிலையில் மருத்துவமனை யில் அவருக்கு அடுத்த அதிர்ச்சி  காத்திருக்கிறது. தனது மனைவி யின் சிறுநீரகம் ஏற்கெனவே திருடு போனதை அறிந்து அதிர்ச்சியடை யும் அவர் அதன்பின் என்ன செய்தார்? அதிகார வர்க்கத்தின் கைகளுக்குள் அவர் சிக்குண்டாரா இல்லையா? அறுவைச் சிகிச்சை நடந்ததா இல்லையா என்பதே மை லார்ட் திரைப்படத்தின் கதை. ஏற்கெனவே கொத்தடிமைகள் போல பணியாற்றும் மக்கள் குடும்ப  நெருக்கடி  காரணமாக தாங்கள்  வாங்கிய கடனை செலுத்த சிறுநீர கத்தை விற்கும் பல சம்பவங்களைப் பார்த்திருக்கிறோம். இடைவேளைக்குப் பிறகு பரபரப்பாகச் செல்லும் திரைக்கதை பார்வையாளர்களைக் கட்டிப் போட்டுள்ளது. முத்துசிற்பியை கொலை செய்ய அமைச்சர் துணிந்தாலும் அதை வெல்லும் இறுதிக்காட்சி நமக்கு சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. வள்ளலார் பக்தராக இருக்கும் சசிகுமார் மனிதநேயமே முக்கி யம் என பேசும் வசனங்கள் கைதட் டல் பெறுகின்றன. ஏழை மக்கள் வறுமையினால் உடலுறுப்பை விற்பதும், அவர்களின் பொருளா தாரப் பின்னணியை சமூக விரோதி கள் பயன்படுத்துவதும், உறுப்புகள் மாற்று அறுவைச் சிகிச்சை விதி முறை தொடர்பாக பல சட்டங்கள் இருந்தாலும் அவை அமலாக்கப் படுவதில்லை. சுயநலமாகச் செயல்படும் அமைச்சர் அதற்கு காரணமாக தனது சித்தாந்தத்தை முன்னி றுத்துவதும், அதை தனது மனித நேயத்தால் வெல்லும் இயக்குநரின் எழுத்து சமகாலத்தின் அரசியல் சூழலை கண்முன் காட்டுகிறது. ஆதிக்க சிந்தனையும், மனித நேயமும் சந்திக்கும் காட்சிகள் அருமையாகக் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. வழக்கமான சண்டைக் காட்சிகளைத் திணிக்காத அதே சூழலில் அழகான பொருத்தமான ரசிக்கும்படியான காதல் காட்சி கள், பாடல்கள் சரியாகப் பயன் படுத்தப்பட்டுள்ளன. ஆதிக்கமும், சுரண்டலும் மனித சமூகத்தின் அடிநாதமான மனிதநேயத்தை சிதைக்க முனைப்பதையும், அதை முறியடிக்க வேண்டிய தேவையை யும் பேசியதற்காக மை லார்ட் திரைப்படத்தை வரவேற்கலாம்.