tamilnadu

img

‘கொள்கை உறுதிமிக்க பொதுவுடமைவாதி’ வி.எஸ். அச்சுதானந்தனுக்கு தமிழக சட்டமன்றம் புகழாரம்

‘கொள்கை உறுதிமிக்க பொதுவுடமைவாதி’ வி.எஸ். அச்சுதானந்தனுக்கு தமிழக சட்டமன்றம் புகழாரம் 

சென்னை, அக். 14 - விடுதலைப் போராட்ட வீரரும், கேரள முன்னாள்  முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முது பெரும் தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தனுக்கு,  ‘ஒரு கொள்கை உறுதிமிக்க பொதுவுடமைவாதி’ என  தமிழ்நாடு சட்டமன்றம் புகழாரம் சூட்டியது. தமிழ்நாடு சட்டமன்றத்தின் நான்குநாள் கூட்டம்  செவ்வாயன்று காலை 9.30 மணிக்கு துவங்கிய நிலையில், மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மங்களூர் புரட்சிமணி, திருப்பூர் குணசேகரன், காவிரிப்பட்டினம் கோவிந்தசாமி, மதுரை கிழக்கு அமர்நாத், கிருஷ்ணராயபுரம் அறிவழகன், நெல்லிக் குப்பம் துரை. அன்பரசன் என்கிற ராமலிங்கம், அரவக் குறிச்சி கலில் ரகுமான், தர்மபுரி சின்னசாமி ஆகியோர் மறைவுக்கு இரங்கல் குறிப்பை பேரவைத்  தலைவர் மு.அப்பாவு வாசித்தார். இவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் உறுப்பினர்கள் 2  நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து, தோழர் வி.எஸ். அச்சு தானந்தன் 101-ஆவது வயதில் மறைந்தது குறித்து  தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பேரவைத் தலைவர்  மு. அப்பாவு அதுதொடர்பான இரங்கல் குறிப்பை வாசித்தார். மக்கள் மனம் கவர்ந்த தலைவர் அதில், “இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முது பெரும் தலைவரும், கேரள மாநில முன்னாள் முதல மைச்சருமான தோழர் வி.எஸ். அச்சுதானந்தன் 2025 ஜூலை 21 அன்று மறைந்த செய்தி அறிந்து, இப்பேரவை அதிர்ச்சியும், ஆற்றொண்ணா துயர மும் கொள்கிறது” என்று தெரிவித்த பேரவைத் தலை வர் மு. அப்பாவு,  “கேரள மாநிலத்தின் மிகப்பெரும் அரசியல் ஆளுமையாக திகழ்ந்தவர் தோழர் வி.எஸ். அச்சுதானந்தன். கொள்கை உறுதிமிக்க பொது வுடமைவாதியாகவும் மக்கள் மனம் கவர்ந்த தலைவ ராகவும் திகழ்ந்தவர். அவரது மறைவால், அவரை  இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள், கேரள மாநில  மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த பேரவை தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது” என்றும் கூறினார். தோழர் வி.எஸ். அச்சுதானந்தனுக்கு அஞ்சலி  செலுத்தும் வகையில் உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன்,  நாகாலாந்து மாநில ஆளுநர் இல. கணேசன் ஆகி யோர் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் தேசியப் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி மறைவுக்கும், தமிழ்நாடு  அரசின் முதன்மைச் செயலாளர் பீலா வெங்கடே சன் ஐ.ஏ.எஸ். மறைவுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கரூர் துயர சம்பவத்தில் பலியான  41 பேருக்கு பேரவையில் அஞ்சலி கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக் கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. “அரசியல் கட்சி பரப்புரை கூட்டத்தில் 41 பேர்  பலியான செய்தி அறிந்து இந்த பேரவை அதிர்ச்சி யும், ஆற்றொண்ணா துயரமும் கொள்கிறது” என்றும்,  “காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்கள் விரை வில் குணமடைய வேண்டும் என்று பேரவை விழை கிறது. இந்த துயர சம்பவத்தில் உறவுகளை இழந்து  வாடும் குடும்பத்தினருக்கு பேரவை ஆழ்ந்த  இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்  கொள்கிறது” என்று தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் அனைவரும் 2  நிமிடம் அஞ்சலி செலுத்தினர். மேலும், கோவை மாவட்டம், வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.கே.அமுல் கந்த சாமி (அதிமுக) மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அஞ்சலி செலுத்திய தும் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலை வர் மு.அப்பாவு அறிவித்தார். புதன்கிழமை (அக்டோபர் 15), 2025-2026 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் பேரவையில் தாக்கல் செய்யப்படு கின்றன. அதன் மீது விவாதம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து, வெள்ளிக்கிழமை வரை  4 நாட்களுக்கு சட்டப்பேரவை நடைபெறுகிறது.