அன்புக் கரங்கள் திட்டத்தில் பயன்பெற்ற மாணவ, மாணவியர் முதல்வருக்கு நன்றி
திருவாரூர், அக். 6- அறிவுடையோர் உலகத்தில் மதிப்பு பெறவும், தாழ்ந்த நிலையிலிருந்து உயர்ந்த நிலையை அடையவும் கல்வி அவசியம் என்பதனை மையமாக கொண்டு அமையப்பெற்ற “அன்புக்கரங்கள்” திட்டத்தினை தமிழக முதல்வர் செப்.15 அன்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற அன்புக்கரங்கள் நிகழ்ச்சியில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு உதவித் தொகைக்கான ஆணையினை மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ் ஆகியோர் வழங்கினர். இத்திட்டத்தின் கீழ் பயனடையும் குழந்தைகள் பள்ளிப்படிப்பு முடித்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு தொடர்ந்து வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். ‘நிறைந்தது மனம்’ நிகழ்ச்சியில், திருவாரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் 6339 குடும்பங்களிலிருந்து 106 குழந்தைகள் கண்டறியப்பட்டு, முதற்கட்டமாக 98 குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டாம் கட்டமாக மீதமுள்ள குழந்தைகளுக்கும் நிதியுதவி அளிக்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற்ற மாணவ, மாணவியர்கள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தங்களது நன்றியினை தெரிவித்தனர்.
