tamilnadu

img

புதிர் விளையாட்டு - மஞ்சு

புதிர் விளையாட்டு

புதிர்கள் நம்மைப் புதுப்புது வழிகளில் யோசிக்க வைக்கின்றன. அந்தச் சுவையான அனுபவத்தைப் பெற நீங்களும் இந்தப் புதிரை அவிழ்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள். கேள்விக்குள் நுழைவதற்கு முன் கடைசியில் தரப்பட்டிருக்கும் விடையை முதலிலேயே பார்ப்பதில்லை என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். காட்டுக்குள்ளே கால்கள் எவ்வளவு தொலைவு போகும்? கவிதாவும் மகிழனும் காட்டுக்குள் போய்ப் பார்த்துவிட்டு வர வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். பிள்ளைகளை அச்சமற்றவர்களாக வளர்க்க விரும்புகிறவர்கள் அவர்களுடைய பெற்றோர். ஆகவே, உணவு, தின்பண்டங்கள், தண்ணீர் எல்லாம் கொடுத்து மகிழ்ச்சியாக அனுப்பி வைத்தார்கள். புறப்படும்போது மட்டும், “காட்டுக்குள்ள ரொம்ப தூரம் போயிடாதீங்க, இருட்டுறதுக்கு முன்னால திரும்பி வந்துடுங்க,” என்று சொன்னார்கள். இருவரும் உற்சாகமாகக் காட்டுக்குள் நடந்தார்கள். பெரிய பெரிய மரங்களையும் பச்சைப் பசேலென்ற செடிகளையும் அழகழகான பூக்களையும் குட்டிக் குட்டி விலங்குகளையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்கள். திடீரென்று மகிழனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. “கவி, நாம காட்டுக்குள்ள எவ்வளவு தூரம் போக முடியும்,” என்று கேட்டான். “தெரியலையே,” என்றாள் கவிதா. இப்போது நீங்கள் சொல்லுங்கள். அவர்கள் இருவராலும் காட்டின் உட்புறம் நோக்கி எவ்வளவு தொலைவு போக முடியும்?  விடை காட்டின் சரிபாதி வரைக்கும்தான் போக முடியும்.  அதற்கு மேல் நடக்கிறபோது அது காட்டின் வெளிப்புறம் நோக்கி நடப்பதாகத்தானே ஆகும்?