இலங்கை தமிழர்கள் குடியிருப்புப் பகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திடு
ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., வலியுறுத்தல்
ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., வலியுறுத்தல் புதுக்கோட்டை, செப். 22- புதுக்கோட்டை மாவட்டம் திருமலைராயர் சமுத்திரம் ஊராட்சி உடையனேரி பகுதி தற்போது புதுக்கோட்டை மாநகராட்சி உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் உள்ள இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியோர் முகாமில் அரசு புறம்போக்கில் குடியிருந்து வரும் 210 குடும்பங்களுக்கு இதுவரை பட்டா இல்லாமல், மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் ஏதுமில்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு பட்டா வழங்குவதை போலியான ஆவணங்களை உருவாக்கிக் கொண்டு சில அரசியல் பிரமுகர்கள் தடுத்து வருகின்றனர். அதனால், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் சிறப்பு கவனம் செலுத்தி இப்பகுதி மக்களுக்கு பட்டா மற்றும் அடிப்படை வசதிகள் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டுமென திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் வலியுறுத்தியுள்ளார். உடையனேரி இலங்கை தமிழர் குடியிருப்பு சந்திப்பு நிகழ்வில், ஆர்.சச்சிதானந்தம் எம்.பி.,யுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சலோமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.