tamilnadu

img

பொது இடம், சாலை ஆக்கிரமிப்பை மீட்கக் கோரி ஆட்சியரிடம் மனு

பொது இடம், சாலை ஆக்கிரமிப்பை  மீட்கக் கோரி ஆட்சியரிடம் மனு

திருச்சிராப்பள்ளி, செப். 15-  திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், ஸ்ரீரங்கம் அம்பேத்கார் நகர், கோகுலத்தெரு பொதுமக்கள் சார்பில், ராஜசேகர் என்பவர் ஆட்சியரிடம் மனு கொடுத்தார். அந்த மனுவில், “ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகர், கோகுலத் தெருவில் தலைமுறை தலைமுறையாக வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆதிமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. நாங்கள் பல தலைமுறைகளாக வணங்கி வரும் இக்கோவிலுக்கு மேல்புறம் உள்ள 6 சென்ட் நத்தம் புறம்போக்கு நிலம், கோவில் பயன்பாட்டில் ஆண்டாண்டு காலமாக உள்ளது.  ஆனால், தற்போது எங்கள் பகுதியில் வசித்து வரும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சி.என்.மணிமாறன், அவரின் மனைவி எம். அம்சவள்ளி மற்றும் அவரின் அத்தை எம்.வனத்தாயி, அவரின் மகன்கள் எம். கதிர்சண்முகம், எம். திருமணிவாசன் ஆகியோர் காவல் துறையின் அதிகாரத்தை வைத்து பொதுமக்களின் பொதுச்சாலையை ஆக்கிரமிப்பு செய்து, ஆஸ்பெஸ்டாஸ் வீடு அமைத்து உள்ளனர்.  இதனால், அவசர காலங்களில் தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், கோவிலுக்கு பயன்படுத்தி வந்த 6 சென்ட் நத்தம் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யத் தொடங்கி, இரண்டு கருங்கல் தூண்கள் ஊன்றியுள்ளனர். கிராம பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி கேட்டபோது, தான் காவல்துறையில் உள்ளதாகவும், அவர்களை பெட்டிகேஸ் போட்டு உள்ளே தள்ளி விடுவதாகவும் கூறி, அனைவரையும் மிரட்டி வருகிறார். எனவே, கிராம பொதுமக்கள் நலன் கருதி இதில் தலையிட்டு, தக்க நடவடிக்கை எடுத்து, அந்த இடத்தை மீட்டுத்தருமாறு கேட்டுக் கொள்கிறோம்’’ என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.