காரணியேந்தல் பர்வீன்பானு குடும்பத்திற்கு அரசு ரூ.3 லட்சம் நிதி உதவி அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்
அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்
புதுக்கோட்டை, ஆக. 21- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாகுடியை அடுத்த காரணியேந்தல் கிராமத்தில் பாலியல் வன்கொடுமை செய்து, படுகொலை செய்யப்பட்ட பார்வீன்பானு குடும்பத்திற்கு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், அரசு சார்பில் நிதி உதவி வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வட்டம், நாகுடி அருகே உள்ள காரணியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பர்வீன்பானு(40). கணவரை இழந்த இவர், தினுசாபானு மற்றும் நெஸியா என்ற இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார். இவர்கள் கால்நடைகளை மேய்த்தும், விவசாயம் செய்து வந்த நிலையில், கடந்த 14.07.2025 அன்று மாலை கருங்குழிக்காடு கண்மாய் பகுதியில் மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த மாடுகளை பிடித்து வரச் சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடிப் பார்த்த பொழுது பர்வீன்பானு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவர் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக ஒருவரை காவவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சத்துக்கான காசோலையை மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் புதன்கிழமை வழங்கினார். அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் ச.சிவக்குமார், நகர்மன்ற தலைவர் ஆனந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.