மடகாஸ்கர் : ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்
அன்டனனரிவோ,அக்.15- ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் நடைபெற்ற பெரும் போராட்டத்தை அந்நாட்டின் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதாக அறிவித்துள்ளது. செப்டம்பர் மாத இறுதியில் இருந்து அந்நாட்டின் பிரான்ஸ் ஆதரவு அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகப் போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. ராஜோலினா பதவி விலக வேண்டும் என போராட்டம் தொடர்ந்தது. மடகாஸ்கர் ராணுவத்தின் சிறப்புப் படை பிரிவான நிர்வாக மற்றும் தொழில்நுட்பப் பணியாளர் மற்றும் சேவைகள் நிர்வாகப் படை (CAPSAT) போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்தது. இதற்கிடையே ராஜோலினா நாடாளுமன்றத்தைக் கலைக்க உத்தரவு பிறப்பிக்க முயன்றார். அதற்குப் பதிலடியாக, நாடாளுமன்றம் அவரை பதவி நீக்கம் செய்ய வாக்களித்தது. முன்னதாக இம்மாத துவக்கத்தில் அவர் அரசாங்கத்தை கலைத்தார். இந்நிலையில் ராஜோலினா பிரான்ஸ் ராணுவ விமானம் மூலமாக நாட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை அந்நாட்டு தேசிய வானொலியில் பேசிய கேப்சாட் ராணுவப் பிரிவின் பொறுப்புத் தளபதி கர்னல் மைக்கேல் ரண்ட்ரியானிரினா, ராணுவம் அரசை கைப்பற்றியுள்ளது. வரும் நாட்களில் இடைக்கால அரசு அமைக்கப்படும் என அறிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரண்ட்ரியானிரினா, இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கும் இடைக்கால அரசை ராணுவத்தின் தலைமையிலான ஒரு குழு மேற்பார்வையிடும் என்றும், புதிதாக தேர்தல் நடத்தப்படும் வரை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றும் என்றும் தெரிவித்தார். இந்த படைப்பிரிவுதான் 2009 ஆம் ஆண்டு ராஜோலினா மடகாஸ்கர் ஆட்சியை பிடிக்க உதவியது குறிப்பிடத்தக்கது.
