tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துக!  ஓய்வூதியர் சங்க மாநாடு கோரிக்கை

தஞ்சாவூர், ஆக.14-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க 3 ஆவது வட்ட மாநாடு, வட்டத் தலைவர் கணே.மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது.  வட்டச் செயலாளர் மணிவண்ணன், கும்பகோணம் வட்டத் தலைவர் துரைராஜ், செயலாளர் பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் தங்கராஜன் வரவேற்றார். மாவட்ட தணிக்கையாளர் சமுதாக்கனி சங்க கொடி ஏற்றினார். மாநாட்டில், புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தலைவராக தங்கராஜன், துணைத் தலைவர்களாக கணேசன், நமச்சிவாயம், செயலாளராக கண்ணப்பன், துணைச் செயலாளராக தங்கராசு, பொருளாளராக கண்ணை. கருப்பையன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஒரு மாத ஓய்வூதியத்தை பொங்கல் பண்டிகை போனசாக வழங்க வேண்டும். மாதந்தோறும் மருத்துவப்படி ரூ.1000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் திரளான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பயனாளிகளுக்கு  மனைப்பட்டா, உழவர் அட்டை வழங்கல்

தஞ்சாவூர், ஆக.14-  தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், குருவிக்கரம்பை மாரியம்மன் கோவில் வளாகத்தில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.  பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து, 21 பேருக்கு மனைப்பட்டா, 10 பேருக்கு உழவர் அட்டையை வழங்கிப் பேசினார்.  முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் சங்கர், பேராவூரணி வட்டாட்சியர் சுப்பிரமணியன், வட்ட வழங்கல் அலுவலர் ராமச்சந்திரன், சமூகப்பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் கவிதா, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராமலிங்கம், காவல் துறை உதவி ஆய்வாளர் ஜீவானந்தம், குருவிக்கரம்பை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வைரவன், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வைரவன், குருவிக்கரம்பை சின்னப்பா மற்றும் பலர் கலந்து கொண்டனர். மருத்துவ அலுவலர் ரேவதி தலைமையில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.  முகாமில், தேவை ஏற்படுவதற்கு முன்னதாக தேவையான ஆவணங்களை வழங்கி, அனைவரும் முதலமைச்சரின் காப்பீட்டு அட்டையை பெற வேண்டும். சிறுநீரக பாதிப்புடையோர், புற்றுநோய், ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டோருக்கு மாதம் ரூ. ஆயிரம் நிவாரணம் வழங்கப்படுகிறது. பயனாளிகள் விவரம் ரகசியம் காக்கப்படும். தேவையுடையோர் பேராவூரணி சமூகப்பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.  இதேபோல், பல்வேறு துறைகளின் அலுவலர்கள் தங்கள் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினர்.